உயிருடன் விளையாடிய ஏர் இந்தியா விமானம்.. காலாவதியான உரிமத்துடன் 8 முறை இயக்கம்! DGCA அதிர்ச்சி தகவல்

Published : Dec 02, 2025, 06:15 PM IST

டாடா குழுமத்தின் ஏர் இந்தியா விமானம் ஒன்று, விமானப் பயணத் தகுதி உரிமம் காலாவதியான பிறகும் எட்டு முறை இயக்கப்பட்டுள்ளது. இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

PREV
15
காலாவதியான உரிமத்துடன் பறந்த ஏர் இந்தியா விமானம்

டாடா குழுமத்தின் 'ஏர் இந்தியா' நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் ஏ320 (Airbus A320) ரக விமானம் ஒன்று, அதன் விமானப் பயணத் தகுதி உரிமம் (Airworthiness License) காலாவதியான பிறகும், எட்டு முறை இயக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது.

25
தாமதமாகக் கண்டுபிடிக்கப்பட்ட தவறு

ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவையில் நிகழ்ந்துள்ள இந்தத் தவறு பதிவுகளைச் சரிபார்த்த ஒரு பொறியாளரால் கண்டுபிடிப்பட்டுள்ளது. உடனடியாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து DGCA தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

விதிகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான அபராதங்கள் விதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஊழியர்களை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிகப் பணி நீக்கம் செய்துள்ளது. இது தொடர்பான விசாரணையையும் தொடங்கியுள்ளது.

35
விமானப் பயணத் தகுதிச் சான்றிதழ் என்றால் என்ன?

விமானம் பாதுகாப்பாகப் பறக்கத் தகுதியுடையதா என்பதைச் சோதித்து உறுதி செய்த பிறகு, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விமானப் பயணத் தகுதிச் சான்றிதழை வழங்கும். இந்தச் சான்றிதழ் ஆண்டுதோறும் விமானங்களை சோதனை செய்து வழங்கப்படுகிறது. இந்தச் சான்றிதழ் சரியாக இல்லாமல் ஒரு விமானத்தை இயக்குவது மிகவும் கடுமையான விதிமீறலாகும்.

இந்த விதிமீறலில் ஏர் இந்தியா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிக அபராதங்கள் விதிக்கப்படலாம். அல்லது மூத்த அதிகாரிகள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

45
பாதுகாப்பு குறித்த கேள்வி

பொதுவாக, விமான நிறுவனங்கள் சான்றிதழின் காலாவதி தேதிக்கு குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே அதனைப் புதுப்பிக்கும் பணிகளைத் தொடங்கும் என்று DGCA மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார். மேலும், தினசரி செயல்பாடுகளுக்குப் பிறகு, இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்படும் விமானத்தை ஒரு பொறியாளர் ஆய்வு செய்து, அனைத்து ஒப்புதல்களையும் சரிபார்க்க வேண்டும்.

இந்த ஏ320 விமானம் காலாவதியான உரிமத்துடன் எட்டு முறை பறந்துள்ளது, இது விமான நிறுவனத்தின் பாதுகாப்புப் நடைமுறைகள் (Safety Culture) குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.

விமான நிறுவனம் பயணத் தகுதி ஆய்வின் ஒரு பகுதியாக பல்வேறு முக்கிய காரணிகளைச் சரிபார்க்க வேண்டும். இந்த வேலையைப் பார்ப்பதற்காக ஏர் இந்தியாவில் பயணத் தகுதி மேலாண்மை அமைப்பு (CAMO) ஒன்றும் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

55
ஏர் இந்தியா அளித்த விளக்கம்

இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்திய ஏர் இந்தியா, "எங்கள் விமானங்களில் ஒன்று பயணத் தகுதிச் சான்றிதழ் இல்லாமல் இயங்கிய சம்பவம் வருந்தத்தக்கது," என்று கூறியுள்ளது.

"இது எங்கள் கவனத்திற்கு வந்தவுடன், உடனடியாக DGCA-க்குத் தெரிவிக்கப்பட்டதுடன், இந்த முடிவில் தொடர்புடைய அனைத்து ஊழியர்களும் அடுத்தகட்ட ஆய்வுக்குக் காத்திருக்கும் வகையில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் ஒரு விரிவான உள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம், மேலும் விமானப் போகுவரத்து இயக்குநரகத்தின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம்," என்று ஏர் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

விமானங்களில் DGCA குழுக்கள் அவ்வப்போது திடீர் ஆய்வு நடத்தினாலும், ஒவ்வொரு விமானமும் பாதுகாப்பான பறக்கும் நிலையில் இருப்பதை உறுதிசெய்வது விமான நிறுவனத்தின் பொறுப்பாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories