உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவுதான். நோய் நொடியின்றி மனிதன் உயிர்வாழ தேவையான ஊட்டச்சத்து, உணவு மூலமாக தான் நமக்கு கிடைக்கிறது. அத்தகைய உணவை சிறப்பிக்க, உலக உணவு தினம், ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 16 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பசி, பட்டினியால் அவதிப்படும் மக்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டது. அதுமட்டுமின்று, மாறிவரும் உணவுப் பழக்கம் , இதனால் மாறும் வாழ்க்கை முறை போன்ற பல விஷயங்களை சுட்டிக்காட்ட இது ஒரு பொன்னான நாள் என்கின்றனர் ஊட்டச்சத்து வல்லுநர்கள்.
உலக உணவு தினத்தின் கருப்பொருள்:
இந்த ஆண்டிற்கான உலக உணவு தினத்தின் கருப்பொருள் ''பசியோடு யாரையும் விட்டுவிடாதீர்கள்’ என்பதாகும். பசி, பட்டினியால் ஏற்படும்ஊட்டச்சத்து குறைபாடு, மரணம் போன்றவற்றை எதிர்கொள்ள இந்த கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலக உணவு தினம் ஏன் முக்கியமானது?
உலகம் முழுவதும் பசி, பட்டினியால் தவிக்கும் மக்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர். பல நாடுகளில் பட்டினி என்பதே தலையாய பிரச்சனையாக உள்ளது. அதையும் தாண்டி ஊட்டச்சத்து உணவுகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது இதன் குறிக்கோளாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகில் 10 பேரில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். 2020 ஆம் ஆண்டில் கணக்கீட்டின் படி, உலகளவில், ஐந்து வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளில் ஒருவர் வளர்ச்சி குன்றியுள்ளனர், பலருக்கும் போதிய ஊட்டச்சத்து இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகும்.மேலும், கடந்த ஆண்டு ஆப்பிரிக்காவில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் பட்டினியை எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடக்கத்தக்கது.