
சமூக வலைதளங்களில் சில நாட்களாக அத்திப்பழமானது அசைவம் என்கிற விவாதம் எழுந்துள்ளது. அத்திப்பழம் வெளியில் இருந்து பார்ப்பதற்கு பழமாக தோன்றினாலும், அது ஏராளமான சிறிய பூக்களை கொண்டிருக்கும் ஒரு பூக்களின் தொகுப்பாகும். இந்த பூக்கள் பழத்தின் உள்ளே மறைந்து இருப்பதால் காற்று மூலமாகவோ அல்லது தேனீக்கள் மூலமாகவோ மகரந்த சேர்க்கை நடைபெறுவது கிடையாது. இந்த சிக்கலான மகரந்த சேர்க்கைக்காக அத்திமரம் அத்திப்பழக்குளவி என்றழைக்கப்படும் ஒரு குளவியை சார்ந்துள்ளது. இந்த அத்திப்பழ குளவியானது தனது முட்டைகளை இடுவதற்காக ஒரு சிறிய துளை வழியாக அத்திப்பழத்தின் உள்ளே செல்கிறது.
உள்ளே செல்லும் பொழுது அதன் இறகுகள் உடைந்து விடுவதால், அந்த குளவியால் மீண்டும் வெளியே வர முடியாது. உள்ளே சென்ற குளவி பழத்தின் பூக்களில் மகரந்த சேர்க்கை செய்து தனது முட்டைகளை இட்ட பிறகு பழத்தின் உள்ளேயே இறந்து விடுகிறது. அத்திப்பழம் பைசின் என்றழைக்கப்படும் நொதியை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியானது உள்ளே இறந்த குளவியின் உடலை முழுவதுமாக சிதைத்து, அதை அத்திப்பழத்தின் சத்தாக மாற்றி விடுகிறது. உள்ளே பெண் குளவி இட்ட முட்டைகள் பொரிந்து புதிய ஆண் மற்றும் பெண் குளவிகள் வெளிவரும். ஆண் குளவிகள் பழத்தின் உள்ளேயே பெண் குளவிகளை புணர்ந்து பின்னர் இறந்துவிடும். பெண் குளவிகள் அந்த மகரந்தப் பொடியை உடலில் தாங்கியபடி அந்த பழத்தில் இருந்து வெளியேறி, வேறு ஒரு அத்திப்பழத்திற்குள் சென்று இந்த சுழற்சியை துவங்கும்.
அத்திப்பழத்தின் உள்ளே பெண் குளவி இறந்து அதன் உடல், பழத்தின் ஒரு பகுதியாக மாறுவதால் இதை பலரும் அசைவம் என்று கருதுகின்றனர். இறந்த குளவியின் உடல் முழுவதுமாக நொதியால் செரிக்கப்பட்டு விடுவதால் அத்திப்பழத்தை சாப்பிடும் பொழுது அதன் உடலில் எந்தப் பகுதியும் இருக்காது. தற்போது கடைகளில் விற்கப்படும் அத்திப்பழங்கள் குளவியின் உதவி இல்லாமல் சிறப்பு முறையில் மகரந்த சேர்க்கை செய்யப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்த வகை பழங்களுக்கு குளவியின் உதவிகள் தேவைப்படுவதில்லை. இந்த செயல்பாடானது இயற்கையின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. இது ஒரு விலங்கை வேண்டுமென்றே உண்ணுவது அல்ல. மாறாக ஒரு தாவரமும், உயிரினமும் ஒன்றுக்கொன்று சார்ந்து வாழும் ஒரு வாழ்க்கை சுழற்சி ஆகும்.
இந்தியாவில் குறிப்பாக சைவ உணவை பின்பற்றுபவர்கள் மத்தியில் அத்திப்பழம் அசைவமாக கருதப்படுவதற்கு இந்த குளவியின் இறப்பு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அத்திப்பழத்தில் குளவி உயிரினமாக கருதப்படுவதால் இது அசைவ உணவாக வகைப்படுத்தப்படுகிறது. வணிகரீதியாக உற்பத்தி செய்யப்படும் அத்திப்பழங்கள் குளவிகளை சார்ந்த மகரந்த சேர்க்கை செய்யப்படுவதில்லை. இவை பாத்தினோகார்ப்பி முறையில் மகரந்த சேர்க்க இல்லாமல் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. துருக்கி, கிரீஸ் போன்ற நாடுகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. பலருக்கும் அத்திப்பழத்தின் உயிரியல் செயல்முறை பற்றிய முழுமையான புரிதல் இல்லை. இதனால் அத்திப்பழம் அசைவம் என்கிற பொதுவான கருத்து உருவாகியுள்ளது. ஆனால் அறிவியல் ரீதியாக இது முற்றிலும் தாவர அடிப்படையிலான உணவாகவே கருதப்பட வேண்டும். ஏனெனில் குளவிகள் உடல் முழுவதுமாக நொதிக்கப்பட்டு, பழத்தின் ஒரு பகுதியாகவே மாற்றப்பட்டு விடுகிறது.
அத்திப்பழம் அசைவம் என அழைக்கப்படுவதற்கு அதன் மகரந்த சேர்க்கை முறையில் குளவியின் பங்கு மற்றும் அதன் உடல் பழத்தால் உறிஞ்சப்படுவதே காரணமாகும். மத மற்றும் கலாச்சார ரீதியாக சைவ உணவு விதிகளுக்கு இது மாற்றாக கருதப்படுகிறது. இருப்பினும் அறிவியல் ரீதியாக அத்திப்பழத்தில் குளவியின் எச்சங்கள் இல்லை. வணிகரீதியாக கிடைக்கும் அத்தி பழங்களிலும் இந்த முறை பின்பற்றுவதில்லை. எனவே அத்திப்பழத்தை சைவ உணவாகவோ, அசைவ உணவாகவோ கருதுவது தனிப்பட்ட மற்றும் கலாச்சார நம்பிக்கைகளை பொறுத்தது. ஆனால் இதன் ஊட்டச்சத்து மதிப்புகளை கணக்கில் கொள்ளும் பொழுது அத்திப்பழம் ஒரு சிறந்த ஊட்டச்சத்து மிக்க பழம் என்பதை மறவாதீர்கள்.