
ஸ்டெம் செல்கள் என்பது உடலின் எந்த வகையான செல்களாகவும் மாறும் திறன் கொண்ட செல்கள் ஆகும். உதாரணமாக ஸ்டெம் செல்கள் கணையத்தில் இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்களாகவோ அல்லது நரம்பு மற்றும் தசை செல்களாகவோ மாற்றப்படலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்கள் அழிந்து விடுவதால் இந்த ஸ்டெம் செல்களை பயன்படுத்தி புதிய இன்சுலின் செல்களை உருவாக்கி அவற்றை மீண்டும் நோயாளியின் உடலில் செலுத்துவதே இந்த சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும். இது நம்பிக்கைக்குரிய சிகிச்சை முறையாக உருவெடுத்து இருக்கும்போதிலும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. இது ஒரு நிரந்தரமான அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறை அல்ல. சீனா, இந்தியா போன்ற சில நாடுகளில் இந்த சிகிச்சைகள் மருத்துவமனைகளில் சோதனை முறைகளில் வழங்கப்படுகின்றன.
ஸ்டெம் செல் சிகிச்சை மூலமாக 59 வயதுடைய டைப் 2 நீரழிவு நோயாளி 33 மாதங்களாக இன்சுலின் ஊசி இல்லாமல் வாழ்ந்து வருகிறார். இது மருத்துவத் துறையில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் இந்த சிகிச்சை உண்மையிலேயே நீரிழிவு நோய்க்கு சிறந்த தீர்வை அளிக்குமா என்கிற விவாதங்கள் எழுந்துள்ளது. இதற்கு பிரபல டாக்டர் அருண்குமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ஸ்டெம் செல் சிகிச்சை முறையில் டைப் 2 நீரிழிவு நோயாளிகளிலிருந்து ரத்த செல்களில் இருந்து ப்ளூரிபொட்டன்ட் செல்கள் எடுக்கப்படுகின்றன. இவை இன்சுலின் சுரக்கும் ஐலெட் செல்களாக மாற்றப்படுகின்றன. அவை மீண்டும் நோயாளியின் உடலில் செலுத்துவதால் கணையம் இன்சுலினை சுரக்கத் தொடங்குகிறது. இது இன்சுலின் குறைபாடு உள்ள நோயாளிகளுக்கு வரப் பிரசாதமாக அமைந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் கூறியுள்ள அவர், டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் குறைபாடு அடிப்படை காரணம் அல்ல. அவர்கள் உடலில் செல்களுக்கு இன்சுலினை ஏற்றுக் கொள்ளும் சக்தி குறைவாக இருக்கிறது. இது இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் என அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் கணையம், அதிகம் இன்சுலினை உற்பத்தி செய்தாலும், அதை உடல் சரியாக பயன்படுத்தாது. இந்த ஸ்டெம் செல் சிகிச்சை இன்சுலின் எதிர்ப்பு தன்மை அதிகம் உள்ள ஆரம்ப நிலைப்பு நோயாளிகளுக்கு பயன் தராது. ஏனென்றால் அவர்களின் கணையம் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாறாக இன்சுலின் தேவைப்படும் மேம்பட்ட நிலையில் உள்ள டைப் 2 நோயாளிகளுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
அதே சமயம் டைப் 1 நீரிழிவில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது, இன்சுலின் சுரக்கும் செல்களை தாக்கி அழித்து விடுகிறது. ஸ்டெம் செல் மூலம் புதிதாக செலுத்தப்படும் செல்களையும் நோய் எதிர்ப்பு சக்தி மீண்டும் அழிக்க வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்த மருந்துகள் தேவைப்படலாம். இது டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு மேலும் ஆபத்தை விளைவிக்கும். எனவே டைப் 1 நீரிழிவு இருப்பவர்கள் வெளியில் இருந்து இன்சுலின் ஊசி எடுப்பதன் மூலமாகவே ஆரோக்கியமாக வாழ முடியும். டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை தேவையில்லை என்று மருத்துவர் அருண்குமார் விளக்கியுள்ளார். ஸ்டெம் செல் சிகிச்சையில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் இருந்தாலும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு முறை மாற்றங்களே சிறந்த தீர்வாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிக உடல் எடை இருப்பவர்கள் உடல் எடையை குறைப்பதன் மூலம் இன்சுலின் எதிர்ப்பு தன்மையை குறைத்து இன்சுலின் பயன்பாட்டை மேம்படுத்த முடியும். கார்டியோ உடற்பயிற்சிகள், தசைக்கூட்டும் பயிற்சிகள் ஆகியவை நீரிழிவு மேலாண்மைக்கு தேவையானவை. மாவுச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் உட்கொள்வதை குறைத்து கொண்டு புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், காய்கறிகளை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். இந்த வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் டைப் 2 நோயாளிகள் மருந்து மாத்திரை இல்லாமல் கூட சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர் அருண்குமார் விளக்கியுள்ளார். இந்த சிகிச்சை முறையில் பல நன்மைகள் இருந்தாலும் சவால்களும் ஆபத்துகளும் உள்ளன.
ஸ்டெம் செல் சிகிச்சை முறை மிகவும் செலவுமிக்கது. இந்தியாவில் இதற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை செலவாகலாம். நன்கொடையாளரின் ஸ்டெம் செல்களை பயன்படுத்தும்போது நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் அதை நிராகரிக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு லேசான எலும்பு வலி அல்லது தொற்றுகள் ஏற்படும் ஆபத்துகளும் உள்ளன. பிற்காலத்தில் ஸ்டெம் செல் சிகிச்சை சர்க்கரை நோய்க்கு புரட்சிகரமான தீர்வாக இருக்கக்கூடும். இது நோயை நிர்வகிப்பதை விட, நோயின் மூல காரணத்தை சரி செய்ய முயற்சிக்கிறது. ஆனால் இது ஆராய்ச்சி நிலையிலேயே இருப்பதால் சிகிச்சை குறித்த முழுமையான தகவல்களைப் பெற்ற பிறகு முடிவெடுக்க வேண்டும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மருத்துவ நிபுணரின் ஆலோசனையை பெறுங்கள்.