
பெண்களின் கருப்பையின் தசை சுவரில் உருவாகும் புற்றுநோய் அல்லாத கட்டிகள் ஃபைப்ராய்டு கட்டிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை ஃபைப்ரோமயோமா அல்லது லியோமயோமா என்றும் அழைக்கப்படுகின்றன. இது பெண்களுக்கு காணப்படும் பொதுவான பிரச்சனையாகும். இது அறிகுறிகள் ஏதும் காட்டுவதில்லை. இருப்பினும் சிலருக்கு அதிக இரத்தப்போக்கு மற்றும் வலி மற்றும் பிற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இந்த கட்டிகள் உருவாவதற்கான சரியான காரணம் இன்னமும் முழுமையாக அறியப்படவில்லை. இருப்பினும் சில முக்கிய காரணிகள் மற்றும் ஆபத்து காரணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய இரண்டு ஹார்மோன்களும் கருப்பைகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்களாகும். இவை ஃபைப்ராய்டு கட்டிகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். மாதவிடாய் சுழற்சியின் போது ஹார்மோன்களின் அளவு அதிகமாகும் பொழுது ஃபைப்ராய்டுகள் வளர்கின்றன. மாதவிடாய் நின்ற பிறகு ஹார்மோன் அல்லது குறையும் பொழுது இந்த கட்டிகள் சுருங்குவது பொதுவாக காணப்படுகிறது. இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணிகளும் ஃபைப்ராய்டு வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம். குடும்பத்தில் யாருக்காவது ஃபைப்ராய்டு கட்டிகள் இருந்தால் அடுத்த தலைமுறைக்கு வரும் வாய்ப்புகள் அதிகம். பரம்பரை காரணமாகவும் இந்த கட்டிகள் வரலாம்.
ஃபைப்ராய்டு கட்டிகள் பொதுவாக இனப்பெருக்க வயதான 20 முதல் 50 வயது வரை பெண்களுக்கு ஏற்படுகிறது. மாதவிடாய் நிறுத்தம் நெருங்கும்பொழுது இதன் ஆபத்து அதிகரிக்கிறது. மாதவிடாய் நின்ற பிறகு இதன் வளர்ச்சி நின்று விடுகிறது அல்லது சுருங்கி விடுகிறது. ஆப்பிரிக்கா அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் பெண்களுக்கு ஃபைப்ராய்டு கட்டிகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்றும், அவை பெரியதாகவும், அறிகுறிகளுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஃபைப்ராய்டு கட்டிகள் உருவாவதற்கு உடல் எடையும் ஒரு காரணமாக அமைகிறது. உடல் பருமன் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரித்து ஃபைப்ராய்டு கட்டிக்கு வழி வகுக்கின்றன. அதிக சிகப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு உணவுகளை உட்கொள்வது ஃபைப்ராய்டு கட்டிகள் உருவாவதற்கான அபாயத்தை அதிகரிக்கலாம். அதிக மன அழுத்தம், ஹைப்போ தைராய்டிசம், பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள், வைட்டமின் டி குறைபாடும் இந்த கட்டிகள் உருவாக பிற காரணங்களாகும்.
ஃபைப்ராய்டு கட்டிகளை முழுமையாக தடுப்பதற்கு குறிப்பிட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை. இருப்பினும் சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் இந்த கட்டிகளின் அபாயத்தை குறைக்க உதவும். நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை அதிகம் சேர்த்துக் கொள்வது ஈஸ்ட்ரோஜன் அளவை கட்டுப்படுத்தும். ப்ளூபெர்ரி, செர்ரி, கீரைகள், சிட்ரஸ் பழங்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது ஃபைப்ராய்டு வளர்ச்சியை குறைக்க உதவும். சிவப்பு இறைச்சி மற்றும் அதிக கொழுப்பு நிறைந்த வறுத்த பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். சில ஆய்வுகள் பால் பொருட்களும் ஃபைப்ராய்டு வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கான உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை. இருப்பினும் மிதமான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை குறைப்பது, போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும் அவசியம்.
உடல் எடையை சீராக வைத்திருப்பது ஃபைப்ராய்டு கட்டிகளை அபாயத்தை கணிசமாக குறைக்கும் என கூறப்படுகிறது. வாரத்தின் பெரும்பாலான நாட்களில் உடற்பயிற்சி செய்வது, உடல் எடையைக் குறைப்பதற்கும், ஹார்மோன் சமநிலையைப் பேணுவதற்கும், மன அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவும். யோகா, நடைப்பயிற்சி, நீச்சல் ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம். ஃபைப்ராய்டு கட்டிகள் வைட்டமின் டி குறைபாடுகளுடன் தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே சூரிய ஒளி உணவு அல்லது சப்ளிமெண்ட்கள் மூலம் வைட்டமின் டி கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதிகப்படியான மது அருந்துதல் சிலருக்கு ஃபைப்ராய்டு வளர்ச்சிக்கு தூண்டுதலாக இருக்கலாம். எனவே இவற்றையும் குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக இரத்தப்போக்கு, அடி வயிற்றில் வலி, அடி வயிற்றில் அழுத்தம் ஆகிய அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம். ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் சிகிச்சை பெறுவது எளிதாகும்.
குறிப்பு: ஹார்மோன் சமநிலையை சரி செய்ய மருந்துகள் அல்லது பிற சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். ஃபைப்ராய்டு கட்டிகள் புற்றுநோய் அல்லாதவை என்ற போதிலும் அவை சில அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் ஃபைப்ராய்டு கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கவும், அறிகுறிகளை குறைக்கவும் செய்யலாம். மேற்குறிப்பிட்ட தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் பொதுவான தகவல்களின் அடிப்படையிலானது மட்டுமே. கூடுதல் தகவல்கள் தேவைப்படுபவர்கள் சரியான மருத்துவ அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.