எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய சமையல் பொருள்களில் இலவங்கப்பட்டையும் ஒன்று என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் வெறும் சமையல் பயன்பாட்டிற்காக இதை சொல்லவில்லை, அதன் மருத்துவப்பயன்களுக்கும் பிரபலமானது இலவங்கப்பட்டை. ஆண்டிஆக்சிடண்ட், மெக்னீசியம், ஜிங்க், கார்போஹைட்ரேட், வைட்டமின், புரதம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துகள் இலவங்கத்தில் உள்ளன. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலுப்படுத்த இது பெரிதும் உதவுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு இது பயன்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இலவங்கப்பட்டை மாதவிடாய் காலத்தில் சுழற்சியை சீராக்க உதவியது நிருபணமானது. மேலும் வலி நிவாரணியாகவும், ரத்தப்போக்கை சீராக்கவும் உதவும். இலவங்கப்பட்டை தூளை சூடான நீரில் சேர்த்து அருந்தலாம். பின்னர் தேன் கலந்து குடிக்கலாம். இப்படி குடிக்க விருப்பம் இல்லாதவர்கள் பட்டைத்தூளுடன் தேனை கலந்து சூரணம் போல உண்ணலாம்.
இலவங்கப்பட்டை பயன்கள்
முகத்தில் உள்ள பருக்களை நீக்கி சருமத்தை பளபளக்க வைக்கும். மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை சீராக்கும். மாதவிடாய் வலியை குறைக்கும். மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் மூட் ஸ்விங்ஸ், ஹார்மோன் சமச்சீரின்மை ஆகிய பிரச்சனைகளை தீர்க்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும். இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு இந்தப் பட்டை நல்ல பயன் தரும்.
மாதவிடாய் வலி நிவாரணி
மாதவிடாய் காலங்களில் சிலருக்கு மயக்கம், சோர்வு, வாந்தி வயிற்றுப்போக்கு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். அடிவயிறு தாங்க முடியாத அளவுக்கு அதிகமான வலியை ஏற்படுத்தும். இது மாதிரியான நேரங்களில் இலவங்கப்பட்டை பெரிதும் உதவுகிறது. சூடான பாலில் பட்டை தூளை கலந்து அதனை அருந்தினால் மாதவிடாய் வலியில் இருந்து விடுபடலாம். இலவங்கப்பட்டையை கொண்டு தயாரித்த மூலிகை தேநீரை தயாரித்து அருந்தினால் வலி குறையும். வலி ஏற்படும்போது இலவங்கப்பட்டை எண்ணெய் வயிற்றி தடவி மசாஜ் செய்யலாம்.