Published : Aug 03, 2025, 01:33 PM ISTUpdated : Aug 03, 2025, 01:58 PM IST
தும்மும் போது, இருமும் போது, சிரிக்கும்போது சிறுநீர் வெளியேறுவது என்பது சிறுநீர் அடங்காமை (Stress Urinary Incontinence) என்று அழைக்கப்படும் ஒரு உடல் நலப் பிரச்சனையாகும். இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சிலருக்கு பலமாக தும்மினாலோ, இருமினாலோ அல்லது சிரிக்கும் பொழுது சிறுநீர் வெளியேறிடும். இது பொதுவான உடல்நல பிரச்சனையாக மருத்துவத்துறையில் பார்க்கப்படுகிறது. பொதுவாக இடுப்பு தசைகள் பலவீனமடைவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இடுப்பு தசைகள் பலவீனமாக இருக்கும் பொழுது சிறுநீர்ப்பை மீது ஏற்படும் திடீர் அழுத்தம் காரணமாக இந்த சிறுநீர் கசிவு ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
25
தும்மும்போது சிறுநீர் வெளியேற காரணங்கள்
கர்ப்ப காலத்தில் கருப்பையின் அழுத்தம் காரணமாகவும், பிரசவத்தின் போது இடுப்பு தசைகள் பலவீனம் அடைவதாலும் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம். பிரசவத்திற்குப் பிறகு இந்த தசைகள் பழைய நிலைக்கு திரும்புவதற்கு சில காலம் எடுத்துக் கொள்ளும். மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால் சிறுநீர்ப்பை மற்றும் இடுப்புத் தசைகள் பலவீனமடையும். இதுவும் சிறுநீர் அடங்காமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதிக உடல் எடை இடுப்பு தசைகள், சிறுநீர்ப்பை மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் இந்த தசைகள் பலவீனமடைந்து சிறுநீர் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
35
சிறுநீர் அடங்காமையை குணப்படுத்த தீர்வுகள் உள்ளன
வயது அதிகரிக்கும் பொழுது இடுப்பு தசைகள் இயற்கையாகவே பலவீனமடையும். இதன் காரணமாகவும் சிறுநீர் கசிவு ஏற்படலாம். ஆஸ்துமா அல்லது புகைப்பிடித்தல் போன்ற காரணங்களால் ஏற்படும் தொடர்ச்சியான இருமல் இடுப்பு தசைகள் மீது தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் கருப்பை நீக்கம் அல்லது புராஸ்டேட் சுரப்பி சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகளும் இடுப்பு தசைகளை பலவீனப்படுத்தலாம். இதன் காரணமாக இருமல், தும்மல், சிரிப்பின் போது சிறுநீர் வெளியேறி விடுகிறது. சிறுநீர் அடங்காமையை நிர்வகிக்கவும் குணப்படுத்தவும், பல மருத்துவ தீர்வுகள் உள்ளன. இடுப்பு தசைகளை வலுப்படுத்த உதவும் கெகல் பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இந்த பயிற்சிகளை முறையாக செய்ய ஒரு பிசியோதெரபிஸ்ட் உதவியை நாடலாம்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடல் எடையை குறைத்தல், மது மற்றும் காஃபின் உட்கொள்ளலை குறைத்தல், தண்ணீர் அருந்துவதை கட்டுப்படுத்தாமல் இருத்தல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இந்த பிரச்சனையை சரி செய்யலாம். சில மருந்துகள் சிறுநீர்ப்பையை வலுப்படுத்தவோ அல்லது தசைகளை தளர்த்தவோ உதவும். எனவே இந்த பிரச்சனை இருப்பவர்கள் சரியான மருத்துவரை அணுகி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். மருத்துவர் உங்கள் நிலையைப் பொறுத்து சரியான மருந்துகளை பரிந்துரை செய்வார். ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சிறுநீர் கழிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இதனால் சிறுநீர்ப்பையின் கொள்ளளவை அதிகரிக்க முடியும். சில சமயங்களில் சிறுநீர் பை மீது அழுத்தத்தை குறைக்கும் பெசரி போன்ற சிறிய சாதனங்களை பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.
55
முழுமையாக குணப்படுத்தி விட முடியும்
மற்ற சிகிச்சைகள் பலனளிக்காத போது இறுதி கட்டமாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர் பரிந்துரைக்கலாம். இந்த அறுவை சிகிச்சைகள் இடுப்பு தசைகளை வலுப்படுத்தவோ அல்லது சிறுநீர்ப்பையை சரியான நிலையில் நிலை நிறுத்துவதற்கோ உதவும். இது போன்ற சிறுநீர் கசிவு ஏற்படும் நிலை பலருக்கு சங்கடமானதாக இருக்கலாம். ஆனால் சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதன் மூலம் இதை குணப்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களின் நிலையைப் பற்றி மருத்துவரிடம் வெளிப்படையாக பேச தயங்குதல் கூடாது. முறையான சிகிச்சை மற்றும் மருந்துகளின் உதவியுடன் இந்த நிலையை முழுமையாக குணப்படுத்தி விட முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.