Covid Vaccine : கர்நாடகாவில் அதிகரித்த மாரடைப்பு மரணங்கள்.. கொரோனா தடுப்பூசி தான் காரணமா?

Published : Jul 04, 2025, 10:11 AM IST

hassan district heart attack, Covid vaccine is the reason siddaramiah claims : கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் திடீர் மாரடைப்பால் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.  

PREV
14
Hassan District Heart Attack - Covid Vaccine Death

சமீப காலமாக இந்தியாவில் ஏற்படும் திடீர் மாறடைப்புகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகங்கள் கிளம்பி வருகின்றன. இது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசிகளுக்கும், திடீர் மரணங்களுக்கும் தொடர்பு இல்லை என்று மருத்துவர்களும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவை தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆய்வுகளின் முடிவில் கொரோனா தடுப்பூசிகளுக்கும் மரணங்களுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

24
கொரோனா தடுப்பூசியால் மரணங்கள்?

18 முதல் 45 வயது கொண்ட இளைஞர்களிடையே ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் இணைந்து நடத்திய ஆய்வுகளில் கொரோனா தடுப்பூசிகள் திடீர் மரண அபாயத்தை அதிகரிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த திடீர் மரணங்களுக்கு வாழ்க்கை முறை மாற்றங்கள், ஏற்கனவே இருந்த உடல் நலக் கோளாறுகள், இணை நோய்கள், மரபு ரீதியான பிரச்சனைகள், கொரோனா தொற்றுக்குப் பின் ஏற்பட்ட சிக்கல்கள் ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை. இதன் பக்கவிளைவுகள் மிக அரிதானவை. கொரோனா தடுப்பூசியால் மரணம் என்று கூறுவது தவறானது என்று மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

34
கர்நாடகாவில் திடீரென அதிகரித்த மாரடைப்பு மரணங்கள்

இந்த நிலையில் கர்நாடகாவில் ஹசன் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்தனர். தொடர் மாரடைப்பு மரணங்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கூறியிருந்தார். சரியான ஆய்வு இல்லாமல் கொரோனா தடுப்பூசிகளை அவசரமாக அங்கீகரித்து பொதுமக்களுக்கு விநியோகித்ததே இந்த மரணங்களுக்கு காரணமாக இருக்கக் கூடும் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் மருத்துவ வல்லுனர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து இது குறித்து முழுமையான ஆய்வு நடத்தப்படும் என்றும் கொரோனா தடுப்பூசி மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட இருப்பதாகவும், மக்களுக்கு நெஞ்சு வலி அல்லது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

44
மறுப்பு தெரிவித்துள்ள சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனம்

இந்த நிலையில் சித்தராமையாவின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்து சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “சுகாதார அமைச்சகத்தால் மேற்கோள் காட்டப்பட்ட படி ஐசிஎம்ஆர் மற்றும் எய்ம்ஸ் நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்ட இரண்டு பெரிய அளவிலான ஆய்வு முடிவுகளின் படி கொரோனா தடுப்பூசிகளுக்கும் திடீர் மரணங்களுக்கும் எந்த தொடர்பையும் கண்டறியப்படவில்லை. இந்த தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்டவை. சமீபத்தில் எழுந்துள்ள கவலைகளை கருத்தில் கொண்டு இதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்” என பதிவிட்டுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories