கும்ப கர்ணன் போல தூங்குபவர்களும் உண்டு. விரைவாக தூங்கி எழுபவர்களும் உண்டு. எந்த வகை தூக்கமாக இருந்தாலும் ஆழ்ந்ததாக இருந்தால் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். லேசான உறக்கத்தில் சிறு சத்தம் கேட்டாலே எழுந்துவிடுவோம். இதனால் அந்த நபர் எளிதில் எரிச்சல் அடையும் ஆளாக மாறுகிறார். ஒரு நபர் நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் தூங்கினால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்க முடியும்.
துரதிஷ்டவசமாக சிலருக்கு எவ்வளவு முயன்றும் ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை. இது அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகிறது. நமக்கு வேலை முக்கியம்; தூக்கம் தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால் உடலுக்கு அப்படியில்லை. சிலர் கொஞ்ச நேரம் தூங்கினாலும் ஆழ்ந்து உறங்குவார்கள். சிலர் மணிக்கணக்கில் தூங்கினாலும் மூச்சுத்திணறல், இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறட்டை, தூக்கத்தில் நடப்பது ஆகிய காரணங்களால் ஆழ்ந்த தூக்கம் அனுபவிப்பதில்லை. இப்படி லேசான உறக்கத்தால் வரும் பிரச்சனை குறித்து இங்கு காணலாம்.