Homemade Hair Oil: வேகமா முடி வளர வீட்டிலே செய்யலாம் மூலிகை எண்ணெய்!இனி கடையில எண்ணெய் வாங்காதீங்க!

First Published Jan 4, 2023, 5:46 PM IST

தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உள்ளிருந்து மட்டுமல்ல, வெளியிலிருந்தும் பராமரிப்பு அவசியம். அதில் மூலிகை எண்ணெய் நல்ல பயன் தரக் கூடியது. 

தலை முடி நன்றாக வளர வேண்டும் என பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஆசை இருக்கும். நரையில்லாமல் கருகருவென முடி வளர்ந்தால் யாருக்குதான் பிடிக்காது. இந்த காலத்தில் சில ஆண்கள் முடி கொட்டி சொட்டை ஆவதால் மொட்டை அடித்து புதிய ட்ரெண்டை உருவாக்கி வருகிறார்கள். அதுவும் தனி அழகு. ஆனால் சிலர் முடியை வளர்த்து தான் ஆக வேண்டும் என துடிக்கிறார்கள். அவர்களுக்காக தான் இந்த செம்பருத்தி மூலிகை எண்ணெய். 

செம்பருத்தி பூவில் வைட்டமின் சி, அமினோ அமிலங்கள் உள்ளிட்ட நிறைய சத்துகள் காணப்படுகின்றன. இவை கூந்தல் வளர்ச்சியில் அபரிமிதமான பலன்களை தரும். இது முடியின் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு பளபளப்பையும் அளிக்கிறது. இந்த மூலிகை எண்ணெய்யில் சேர்க்கும் கறிவேப்பிலை, வெங்காயம், கற்றாழை ஆகியவை முடி வளர்ச்சியில் அதிக பலன் அளிக்கக் கூடியவை

மூலிகை எண்ணெய்யை தயாரிக்க 20 செம்பருத்தி மலர்கள், 15 முதல் 25 மல்லிகைப்பூ, 25க்கும் மேற்பட்ட வேப்ப இலைகள், அதைப் போலவே கறிவேப்பிலை ஆகியவற்றை சேகரியுங்கள். நல்ல சின்ன வெங்காயமாக ஐந்தையும், ஒரு தேக்கரண்டி வெந்தயமும், ஒரு கற்றாழை, ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யும் எடுத்து கொள்ளுங்கள். இதில் வெந்தயம் 30 நிமிடங்கள் நீரில் ஊறவைக்கப்பட்டிருக்க வேண்டும். 

மூலிகை எண்ணெய் தயாரிக்க கற்றாழையை குட்டி துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் எல்லா பொருள்களையும் மிக்ஸியில் மையாக அரைத்து கொள்ளுங்கள். இதனை தேங்காய் எண்ணெய்யில் கலந்துவிடுங்கள். சுத்தமான பாத்திரத்தில் இந்த எண்ணெய்யை ஊற்றி அரை மணி நேரத்திலிருந்து 45 நிமிடங்கள் வரை காய்ச்சி கொள்ளுங்கள். இப்போது எண்ணெய் பச்சை நிறத்தில் மாறியிருக்கும். நன்கு எண்ணெய் குளிர்ந்த பிறகு வடிகட்டி தேவையான பாட்டில்களில் அடைத்து பயன்படுத்துங்கள்.  இந்த எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தினால் அடர்த்தியான கருமை கூந்தலை நீங்கள் சொந்தமாக்கி கொள்ளலாம். 

click me!