கொரோனா தொற்றுக்கு பிறகு மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அடுத்தடுத்து உடற்பயிற்சி செய்யும் போது மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. அண்மையில் தமிழ்நாட்டிலும் இப்படியான மரணங்கள் திகிலூட்டுகின்றன. போன வாரம் கரூரில் நடந்த கபடி போட்டியில் 26 வயது விளையாட்டு வீரர் போட்டி நடக்கும்போதே மாரடைப்பால் உயிரிழந்தார். காவலர் ஒருவர் உடற்பயிற்சி செய்யும்போது மரணமடைந்தது தமிழ்நாட்டையே உலுக்கியது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்த ஆசிரியர் ஓம் பிரகாஷ் திரிபாதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன் ஆந்திரா அரசுப் பள்ளி ஆசிரியர் வீரபாபு (45), மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு வகுப்பிலேயே உயிரிழந்தார். இப்படி அதிகரிக்கும் மரணங்கள் நமக்கு சொல்வது என்ன? மாரடைப்பு ஏற்பட என்னதான் காரணம் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
கொரோனாவுக்கு பிறகு நாட்டில் மாரடைப்பு
கொரோனா தொற்றுக்கு பின் இந்தியாவில் மாரடைப்பினால் ஏற்படும் மரணங்கள் 15% அதிகரித்துள்ளது. அதுவும் இளம் வயதுக்காரர்கள் தான் திடீரென மாரடைப்பால் இறக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மாரடைப்பு அதிகமாக ஏற்படுவதாக கூறப்படுகிறது. அவர்களின் இறப்பு வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், இவ்வாறு இறந்தவர்களில் 50% பேர் புகைப்பிடிக்காதவர்கள், பெரும்பாலானோருக்கு குடும்பத்தில் மரபணுரீதியாக யாருக்கும் இதயக் கோளாறுகள் இல்லை. இந்த தகவல்களை டெல்லி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் சில மருத்துவமனைகளில் மாரடைப்பு காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம், நுரையீரல் பிரச்சனை (ஆபத்தான) அபாயம் அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
மாரடைப்பு காரணங்கள்
உடலில் கெட்டக் கொழுப்பு அதிகமாகும்போது ரத்த குழாயில் அது படிகிறது. இப்படி படியும் ரத்தக் கட்டிகள்(thrombus) ரத்த ஓட்டத்தை பாதிக்கும் காரணத்தால் மாரடைப்பு வரலாம். திடீர் மாரடைப்பிற்கு மன அழுத்தம் அல்லது அதீத உடல் செயல்பாடும் ஒரு காரணம். நம்முடைய வம்சத்தின் மரபணு மூலம் குடும்ப உறுப்பினர்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆண்களுக்கு மாரடைப்பு வர சிகரெட், மது பழக்கம் காரணமாக உள்ளது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கோவிட் தொற்றின் பிந்தைய அறிகுறிகளாக மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது.
இதையும் படிங்க: வெறும் வயிற்றில் அற்புத மசாலா.. கெட்ட கொலஸ்ட்ராலை இயற்கையாகவே கட்டுப்படுத்த 1 எளிய வழி.. ட்ரை பண்ணுங்க!
மாரடைப்பு தடுப்பது எப்படி?
சீரான தூக்கம் அவசியம். குறைந்தபட்சம் ஏழு முதல் எட்டு மணி நேரம் நல்ல தூக்கம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 4 நாட்கள் முதல் ஐந்து நாட்கள் வரை உடற்பயிற்சிகள் மேற்கொள்ளலாம். குறிப்பாக 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கெட்ட கொழுப்பு பரிசோதனையை அடிக்கடி செய்ய வேண்டும். உடலில் கெட்டக் கொழுப்பு அளவுகளை கண்டறிந்து மருந்து, உணவு மருத்துவர்கள் ஆலோசனைபடி எடுத்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையும்.
இதையும் படிங்க: சமையல் எண்ணெய் கொழுப்பு ஏத்திடும்னு சொல்வாங்க.. இந்த எண்ணெய் தினம் 1 ஸ்பூன்.. புற்றுநோய் வந்தா கூட சமாளிக்கும்