
அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப்புக்கு “குரோனிக் வீனஸ் இன்சஃபிஷியன்சி” என்கிற நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது கால்களில் லேசான வீக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, அவருக்கு இந்த பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது. இது தீவிரமான உடல்நல பிரச்சினை இல்லை என்றும், இரத்த கஉறைவு அல்லது தமனி நோய் போன்ற அறிகுறிகள் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த நோய் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. CVI என்பது கால்களில் உள்ள நரம்புகள் இது இரத்தத்தை இதயத்திற்கு திறம்பட எடுத்து செல்ல முடியாத நிலையாகும். இது குறித்த கூடுதல் தகவல்களை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
CVI என்பது கால்களில் உள்ள நரம்புகளில் ஒரு வழி வால்வுகள் இருக்கும். இவை இரத்தத்தை ஈர்ப்பு விசைக்கு எதிராக மேல் நோக்கி இதயத்திற்கு கொண்டு செல்கின்றன. இந்த வால்வுகள் பலவீனமாகவோ அல்லது சேதமடைந்தாலோ இரத்தம் மீண்டும் கால்களில் தேங்கி அழுத்தம் அதிகரித்து பல்வேறு அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும், குறிப்பிட்ட காரணிகள் நோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. வயது அதிகரிக்கும் பொழுது நரம்புகளும் அவற்றின் வால்வுகளும் பலவீனம் அடைகின்றன. 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பிரச்சனை பொதுவானதாக உள்ளது. டிரம்புக்கு வயது 78 என்பதால் அவருக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
வேலை காரணமாகவோ அல்லது வாழ்க்கை முறை காரணமாகவோ நீண்ட நேரம் ஒரே நிலையில் நிற்பது அல்லது உட்கார்ந்து இருப்பது கால்களில் இரத்த ஓட்டத்தை பாதிக்கலாம். இதன் காரணமாக கால்களில் உள்ள நரம்புகள் மற்றும் வால்வுகளில் சேதம் ஏற்பட்டு இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அதிக உடல் எடை கால்களில் உள்ள நரம்புகளின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும், கர்ப்பப்பையின் அழுத்தம் காரணமாகவும் கால் நரம்புகளில் பாதிப்புகள் ஏற்படலாம். குடும்பத்தில் யாருக்கேனும் இந்த நோய் பாதிப்பு இருந்தால் அது பிறருக்கும் வர வாய்ப்புள்ளது. கால்களில் ஏற்பட்ட இரத்த காயங்கள், இரத்த உறைவு அறுவை சிகிச்சைகள் போன்ற காரணங்களாலும் நரம்புகள் பாதிக்கப்படலாம். மேலும் புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, போதிய அசைவு இல்லாத வாழ்க்கை முறை, நரம்புகளில் ஏற்படும் அழற்சி ஆகியவை இந்த நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் ஆகும்.
CVI நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு கால் கணுக்கால்களில் வீக்கம், குறிப்பாக நீண்ட நேரம் நின்ற பிறகு அல்லது நாளின் இறுதியில் கால்களில் கடுமையான வலி, கனமான அல்லது சோர்வான உணர்வு, கால் வலி அல்லது தசை பிடிப்பு, கால்களில் எரிச்சல், நமைச்சல் அல்லது கூச்ச உணர்வு, வீங்கிய சுருண்ட நரம்புகள், வெரிகோஸ் வெயின்ஸ், கணுக்கால்களில் பழுப்பு அல்லது சிவப்பு நிறங்களில் நிறமாற்றம், தோல்களில் வறட்சி, செதில் செதிலாக உதிர்தல், காயங்கள், புண்கள் ஆற தாமதமாவது ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும். இந்த நோயை குணப்படுத்துவதற்கு முழுமையான சிகிச்சைகள் இல்லை என்றாலும் அறிகுறிகளை கட்டுப்படுத்தவும், நிலைமையை மோசமடையாமல் தடுக்கவும் சில வழிகள் உள்ளன. படுக்கும்போது அல்லது உட்காரும்போது கால்களை இதய மட்டத்திற்கு மேல் உயர்த்தி வைப்பது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
அழுத்தமான சாக்ஸ்கள் அணிவது கால்களுக்கு அழுத்தத்தை கொடுத்து இரத்தத்தை மேல் நோக்கி நகர்த்த உதவுகிறது. நடைபயிற்சி போன்ற எளிய உடற்பயிற்சிகள் கால்களில் உள்ள தசையை செயல்பட வைப்பதால் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. உடல் எடையை குறைப்பதன் மூலம் நரம்புகளின் மீதான அழுத்தத்தை குறைக்கலாம். நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பதை தவிர்த்து விட்டு அவ்வப்போது எழுந்து நடப்பது, கால்களை அசைப்பது, உடலுக்கு வேலை கொடுப்பது ஆகியவற்றில் ஈடுபடலாம். சில சந்தர்ப்பங்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த அல்லது இரத்த உறைதலை தடுக்க மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். தீவிரமான சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட நரம்புகளை மூடும் அல்லது அகற்றும் அறுவை சிகிச்சைகள் அல்லது பிற சிகிச்சை முறைகள் தேவைப்படலாம்.
உங்கள் கணுக்கால்களில் வீக்கம் அல்லது கனமாக உணர்வதாக இருந்தாலோ அல்லது கால்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்படுவதாக இருந்தாலும் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். இது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை பாதிக்கும் என்பதால் திடீர் மாரடைப்பு அல்லது உயிரிழப்புகள் கூட ஏற்படலாம். எனவே ஆரம்பக்கட்ட அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள். இந்த தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் மற்றும் மருத்துவர்கள் கூறிய பொதுவான தகவல்களின் அடிப்படையிலானது மட்டுமே. உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.