curd at night: இரவில் தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும், செரிமானம் பாதிக்கும் என்பது நீண்ட காலமாக நிலவும் நம்பிக்கை. ஆனால் இதற்கு அறிவியல் ஆதாரம் உள்ளதா? இரவில் தயிர் சாப்பிடுவது உண்மையில் உடலுக்கு கேடா? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் தயிருக்கும் முக்கிய இடம் உண்டு. அன்றாட உணவு முதல் கோயில் பிரசாதம், குடும்ப விருந்துகள் வரை தயிர் சாதம் தவறாமல் இடம்பெறுகிறது. ஆனால், இரவில் தயிர் சாப்பிடலாமா? சளி, இருமல் ஏற்படுமா? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.
24
இரவில் தயிர் சாப்பிடலாமா?
உண்மையில், ஆரோக்கியமான ஒருவர் இரவில் தயிர் சாப்பிடக்கூடாது என்று பொதுவான மருத்துவ விதி எதுவும் இல்லை. தயிரில் புரதம், கால்சியம் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளது. இவ்வகை உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும் என்றும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
34
தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?
இரவில் தயிர் சாப்பிட்டால் கட்டாயம் சளி அல்லது இருமல் பிடிக்கும் என்பதற்கும் வலுவான மருத்துவ ஆதாரம் இல்லை. முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெற்றால், தயிர் மட்டுமல்ல, எந்த உணவாக இருந்தாலும் தூங்குவதற்கு 2–3 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிடுவது நல்லது என மருத்துவ வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. குறிப்பாக நெஞ்செரிச்சல் அல்லது அசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சினை உள்ளவர்கள் இதை பின்பற்றுவது நல்லது.
நாம் சாப்பிட்ட உடனே தூங்கச் சென்றால் அஜீரணம், வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும், பால் பொருள்களால் வயிற்றுப் பிரச்சனை ஏற்படும் நபர்கள் தயிரை உணவில் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துக்கின்றனர்.
இரவில் தயிர் சாப்பிடவே கூடாது என்று எந்த மருத்துவ விதியும் இல்லை. குறிப்பாக தூங்குவதற்கு முன் வயிறு நிறைய சாப்பிடுவதைத் தவிர்த்து, உணவுக்கும் உறக்கத்துக்கும் சிறிது இடைவெளி வைப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.