
ஒரு குழந்தை பிறந்த பிறகுதான் அதற்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்ற நிலை மாறி, தாயின் கருப்பைக்குள்ளேயே இருக்கும் சிசுவுக்கு அறுவை சிகிச்சை செய்து பாதிப்பைச் சரிசெய்யும் அளவுக்கு மருத்துவத்துறை வளர்ந்துள்ளது. இதற்கு மிக முக்கியமான உதாரணமாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் நிகழ்த்தியுள்ள புதிய சாதனை அமைந்துள்ளது.
தாயின் கருப்பையில் 25 வாரங்களாக வளர்ந்து கொண்டிருந்த சிசுவுக்கு ஏற்பட்டிருந்த கடுமையான முதுகுத்தண்டு குறைபாட்டை, குழந்தை பிறப்பதற்கு முன்பே அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்துள்ளனர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள்.
இந்தியாவில் இதுபோன்ற கடுமையான முதுகுத்தண்டு குறைபாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட முதல் Open Fetal Surgery என இந்தச் சாதனை குறிப்பிடப்படுகிறது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில் 30 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றுள்ளனர்.
இது வெறும் அறுவை சிகிச்சை வெற்றி மட்டுமல்ல. இந்தியாவில் கருவிலேயே சிசுக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ வசதியில் ஏற்பட்டுள்ள முக்கியமான முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகிறது.
சிசுவுக்கு கருவிலேயே கடுமையான முதுகுத்தண்டு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இந்தச் சிசுவுக்கு ஏற்பட்டிருந்த பாதிப்பின் மருத்துவப் பெயர் லும்போசாக்ரல் மைலோமெனிங்கோசீல் (Lumbosacral Myelomeningocele) என்பதாகும். இது ஸ்பைனா பிஃபிடா (Spina Bifida) எனப்படும் பிறவியிலேயே ஏற்படும் நரம்புக் குழாய் குறைபாட்டின் மிகக் கடுமையான வடிவமாகும்.
ஸ்பைனா பிஃபிடா என்றால் என்ன?
கருவில் குழந்தை வளரத் தொடங்கும்போது, அதன் மூளை மற்றும் முதுகுத்தண்டு உருவாக நரம்புக் குழாய் (Neural Tube) உருவாகிறது.
கர்ப்பத்தின் ஆரம்பகட்டத்தில் இந்த நரம்புக் குழாய் முழுமையாக மூடப்பட வேண்டும். ஆனால் சில காரணங்களால் அது சரியாக மூடப்படாமல் போனால், முதுகுத்தண்டில் குறைபாடு ஏற்படலாம். இதுவே ஸ்பைனா பிஃபிடா (Spina Bifida )எனப்படுகிறது. இதில் பல வகைகள் உள்ளன. அவற்றில் Myelomeningocele என்பது மிகவும் தீவிரமான பாதிப்பாகும்.
மைலோமெனிங்கோசீல் பாதிப்பால் என்ன நடக்கும்?
இந்த பாதிப்பை குழந்தை பிறந்த பிறகு சரிசெய்வதற்குப் பதிலாக, கருவிலேயே அறுவை சிகிச்சை செய்து பாதிப்பைக் குறைக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) மருத்துவமனையின் நியூரோ சயின்சஸ் மையத்தில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
இந்த அறுவை சிகிச்சையின் பெயர் Open Fetal Surgery. பொதுவாக குழந்தை பிறந்த பிறகு செய்யப்படும் அறுவை சிகிச்சையில், குழந்தையின் உடலில் நேரடியாகச் சிகிச்சை மேற்கொள்ளப்படும். ஆனால் இந்த முறையில், குழந்தை தாயின் கருப்பைக்குள்ளேயே இருக்கும்போது அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
இந்த அறுவை சிகிச்சையில் தொடர்ந்து அல்ட்ராசவுண்ட் கண்காணிப்பும் உயர்தர நுண்ணோக்கி தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டதாக எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.
30 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஏன் பங்கேற்றனர்?
இது சாதாரண அறுவை சிகிச்சை அல்ல. ஒரே நேரத்தில் தாயின் உயிருக்கும், கருவில் இருக்கும் சிசுவின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டிய சிக்கலான மருத்துவச் செயல்முறையாகும். எனவே பல்வேறு மருத்துவப் பிரிவுகளைச் சேர்ந்த நிபுணர்கள் ஒன்றிணைந்து பணியாற்றியுள்ளனர்.
அதில் முக்கியமாக,
இந்தச் சிகிச்சைக்கு முன்பாக ஐந்து வாரங்களுக்கும் மேலாக மருத்துவக் குழுவினர் திட்டமிடல், கருவின் விரிவான பரிசோதனை, பெற்றோருக்கான ஆலோசனை, மயக்க மருந்து தயாரிப்பு மற்றும் அறுவை சிகிச்சை ஒத்திகை ஆகியவற்றை மேற்கொண்டுள்ளனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு தாயும் சிசுவும் நலமாக உள்ளனர்.
தாயும் சிசுவும் கர்ப்பகாலத்தின் எஞ்சிய நாட்கள், பிரசவம் மற்றும் குழந்தை பிறந்த பிறகான காலகட்டம் என அனைத்திலும் பல்துறை மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் இருப்பார்கள் என எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த அறுவை சிகிச்சையின் மற்றொரு முக்கியமான அம்சம், குடும்பத்தினருக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டிருப்பதாகும். மத்திய அரசின் ஜனனி சிசு சுரக்ஷா காரியக்ரம் (Janani Shishu Suraksha Karyakram – JSSK) திட்டத்தின் கீழ் இந்தச் சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டதாக எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவச் சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.