
தினமும் சாப்பிடும் உணவில் சத்தான காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக, வாழைத்தண்டு என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அதன் நார்ச்சத்துதான். பொதுவாக வாழைத்தண்டை பொரியல், கூட்டு, மோர் குழம்பு என பல வகைகளில் சமைத்திருப்போம். ஆனால், அதையே வைத்து சுவையான சூப் செய்து குடித்துப் பார்த்திருக்கிறீர்களா?
மணக்க மணக்க மசாலாப் பொருட்கள், இஞ்சி, பூண்டு, மிளகு, வெங்காயம் என அனைத்தும் சேர்ந்து தயாராகும் இந்த வாழைத்தண்டு சூப், சுவையில் அசத்துவதோடு மட்டுமின்றி, நார்ச்சத்தும் நிறைந்தது.
குறிப்பாக மழைக்காலத்தில் மாலை நேரத்தில் சூடாக ஒரு கப் சூப் குடிக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வு. வீட்டிலேயே எளிய பொருட்களைக் கொண்டு இந்த ஆரோக்கியமான வாழைத்தண்டு சூப்பை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.
வாழைத்தண்டை சுத்தம் செய்தல்
வாழைத்தண்டின் நார் பகுதிகளை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கவும். கருக்காமல் இருக்க மோர் கலந்த நீரில் போட்டு வைக்கலாம்.
வாழைத்தண்டில் உள்ள நீண்ட நார்களை நீக்க, முள் தண்டு அல்லது கருவேப்பிலைக் குச்சியைப் பயன்படுத்தலாம். நறுக்கிய வாழைத்தண்டில் அந்தக் குச்சியில் கீறல்கள் போட்டு சுற்றினால், அதில் உள்ள நார்கள் குச்சியில் சுற்றிக்கொள்ளும். இவ்வாறு நார்களை முழுமையாக நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
மசாலா அரைத்தல்
அடுத்ததாக மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதனைத் தனியாக வைத்துக்கொள்ளவும்.
மசாலாப் பொருட்களைத் தாளித்தல்
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் தனியா, மிளகு, பட்டை, லவங்கம், ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.
வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்குதல்
இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் மஞ்சள் தூள் சேர்க்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
வாழைத்தண்டு சேர்த்து வேகவைத்தல்
அடுத்து நறுக்கி வைத்துள்ள வாழைத்தண்டு துண்டுகளைச் சேர்த்து மசாலாவுடன் நன்றாகக் கிளறவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும். கடாயை மூடி வைத்து வாழைத்தண்டு நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும்.
வாழைத்தண்டை அரைத்தல்
வாழைத்தண்டு நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து கலவையை ஆறவிடவும். பின்னர் வேகவைத்த வாழைத்தண்டு மற்றும் மசாலா கலவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
இப்போது இந்த விழுதை வாழைத்தண்டு வேகவைத்த தண்ணீரிலேயே மீண்டும் ஊற்றிக் கலக்கவும்.
பருப்பு சேர்த்தல்
அடுத்ததாக பாசிப்பருப்பைத் தனியாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். இதனை சூப்பில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சூப்பின் பதத்திற்கு ஏற்ப தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
சூப்பை கொதிக்கவிட்டு இறக்குதல்
இறுதியாக சூப்பை மிதமான தீயில் வைத்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். மேலே சிறிதளவு கொத்தமல்லித்தழை தூவினால் மணக்க மணக்க சுவையான வாழைத்தண்டு சூப் தயார்.
வாழைத்தண்டு பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்ட காய்கறியாகும். இதில் உள்ள நார்ச்சத்து சீரான செரிமானத்திற்கு உதவுகிறது.
நார்ச்சத்து: செரிமான செயல்பாட்டிற்கும் குடல் இயக்கத்திற்கும் உதவுகிறது.
நீர்ச்சத்து: உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைப் பெற உதவுகிறது.
பாசிப்பருப்பு: தாவர அடிப்படையிலான புரதத்தையும் கூடுதல் ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
இஞ்சி, பூண்டு, மிளகு: சூப்புக்கு நல்ல மணத்தையும் காரச்சுவையையும் அளிக்கின்றன.
சுவையான வாழைத்தண்டு சூப் செய்ய சில குறிப்புகள்