
வழக்கமாக மீன் குழம்பு என்றாலே புளி, மிளகாய்த்தூள், மல்லித்தூள் எனப் பல பொருட்களைச் சேர்த்துச் செய்வதுதான் நமக்குத் தெரியும். ஆனால், புளியைச் சேர்க்காமலேயே கடுகின் காரசாரமான சுவையிலும், கடுகு எண்ணெயின் தனித்துவமான மணத்திலும் அசத்தலான மீன் குழம்பு செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய உணவான மச்சா பெசரா (Macha Besara) இதற்கு ஓர் அருமையான உதாரணம். கடுகு, சீரகம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை அரைத்து, பொன்னிறமாக வறுத்த மீன் துண்டுகளுடன் சேர்த்து மசாலா மணம் கமழச் சமைத்தால், சாதத்துடன் சாப்பிட அட்டகாசமான குழம்பு தயார்.
இதில் தக்காளி அல்லது ஒடிசா பாரம்பரியத்தில் பயன்படுத்தப்படும் காய்ந்த மாங்காய் துண்டுகள் சேர்ப்பதன் மூலம் தேவையான புளிப்பையும் பெறலாம்.
வீட்டில் வழக்கமாகச் செய்யும் மீன் குழம்பிலிருந்து வித்தியாசமான சுவையை விரும்புபவர்கள் இந்த ரெசிபியை நிச்சயம் முயற்சி செய்து பார்க்கலாம்.
மீனை வறுக்க
கடுகு மசாலா அரைக்க
குழம்பு தயாரிக்க
மீனை மசாலாவில் ஊறவைக்கவும்
மீன் துண்டுகளை நன்றாகக் கழுவி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். இதனால் மீனில் மசாலா சுவை நன்றாகப் படியும்.
மீனை பொன்னிறமாக வறுக்கவும்
கடாயில் கடுகு எண்ணெயைச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் மீன் துண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாக வறுக்கவும். மீன் முழுமையாக வெந்து, உடையாமல் இருக்க கவனமாகத் திருப்பவும். பின்னர் அவற்றைத் தனியாக எடுத்து வைக்கவும்.
கடுகு மசாலாவை அரைக்கவும்
ஒரு மிக்சி ஜாரில் மஞ்சள் கடுகு, கருப்பு கடுகு, சீரகம், மல்லி விதை, பூண்டு, இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி , மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
தாளித்து வெங்காயம் வதக்கவும்
மீன் வறுத்த அதே கடாயில் கடுகு எண்ணெயை சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் பாஞ்ச் போரான் (கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, கருஞ்சீரகம்) சேர்த்து தாளிக்கவும். அடுத்து நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
மசாலா மற்றும் உருளைக்கிழங்கை வேகவைக்கவும்
வதக்கிய வெங்காயத்தில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள கடுகு மசாலாவைச் சேர்க்கவும்.
கடுகு மசாலாவை அதிக நேரம் வதக்கக்கூடாது கசந்துவிடும். லேசாக 1 நிமிடம் மட்டும் வதக்கிவிட்டு உடனே உருளைக்கிழங்கு, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி 10 -12 நிமிடங்கள் வேகவைக்கவும்.
உருளைக்கிழங்கு பாதியளவு வெந்ததும் காய்ந்த மாங்காய் துண்டுகளை சேத்து மிதமான தீயில் 5-7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
மீன் சேர்த்தல்
குழம்பு நன்றாகக் கொதித்து பச்சை வாசனை போனதும், வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை மெதுவாக குழம்பில் சேர்க்கவும்.
மீன் சேர்த்த பிறகு மிதமான தீயில் 5 - 7 நிமிடங்கள் குழம்பை கொதிக்கவிடவும். இதனால் மசாலா மீனுக்குள் இறங்கும். குழம்பு மீனில் நன்றாக இறங்கி, மசாலா மணம் வெளிவந்ததும் நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி அடுப்பை அணைக்கவும்.
இப்போது மணக்க மணக்க, காரசாரமான ஒடிசா ஸ்டைல் கடுகு மீன் குழம்பு தயார். இதை சூடான வெள்ளை சாதத்துடன் பரிமாறினால் மிக அருமையாக இருக்கும்.
கடுகை அளவாகப் பயன்படுத்தவும்: அதிகக் கடுகு அல்லது அளவுக்கு அதிகமாக அரைப்பது கசப்பை ஏற்படுத்தலாம்.
கடுகு எண்ணெயைச் சரியாகச் சூடாக்கவும்: அதன் தனித்துவமான மணம் வெளிவர உதவும்.
மீனை அதிகமாகக் கிளறாதீர்கள்: மீன் துண்டுகள் உடையாமல் இருக்க, குழம்பில் சேர்த்த பிறகு மெதுவாகக் கையாளவும்.
காரத்தை உங்கள் விருப்பத்துக்கு மாற்றவும்: காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள் ஆகியவற்றின் அளவைக் குறைத்துக்கொள்ளலாம்.
குழம்பைச் சிறிது நேரம் ஆறவிடவும்: அடுப்பை அணைத்த பிறகு 5 நிமிடங்கள் வைத்திருந்து பரிமாறினால் மசாலா சுவை மீனில் நன்றாகப் படிந்திருக்கும்.
மச்சா பெசராவின் தனிச்சிறப்பு கடுகு மசாலாவும் கடுகு எண்ணெயும் தரும் காரசாரமான மணம்தான். புளி சேர்க்காமல், தக்காளி அல்லது அம்புலா மூலம் புளிப்பைச் சமநிலைப்படுத்தி இந்தக் குழம்பைத் தயாரிக்கலாம். வழக்கமான மீன் குழம்பிலிருந்து மாறுபட்ட சுவையை விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வு.