Idli Maavu Vada: இட்லி மாவில் மெதுவடை..மீதமான மாவை வீணாக்காமல் மொறுமொறுப்பாக செய்வது எப்படி?

Published : Sep 25, 2026, 06:04 PM IST

Idli Maavu Vada: வீட்டில் மீதமான இட்லி மாவை பயன்படுத்தி மொறுமொறுப்பான மெதுவடை செய்வது எப்படி? தேவையான பொருட்கள், செய்முறை, வடை சுவையாகவும் பொன்னிறமாகவும் வர டிப்ஸ் உள்ளிட்ட முழு ரெசிபியை இந்த தொகுப்பில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

PREV
15
இட்லி மாவில் மெதுவடை

காலையில் இட்லி, தோசை செய்து மீதமாகும் மாவை என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? இனி கவலை வேண்டாம். வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களுடன் அந்த இட்லி மாவையே பயன்படுத்தி வெளியில் மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்கும் சுவையான மெதுவடை தயார் செய்யலாம். உளுந்து மாவை தனியாக ஊறவைத்து அரைக்க வேண்டிய அவசியமும் இல்லை. மாலை நேர டீ, காபியுடன் சாப்பிடலாம்.

25
தேவையான பொருட்கள்
  • இட்லி மாவு - 2 கப்
  • வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
  • பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
  • இஞ்சி - 1 சிறிய துண்டு, பொடியாக நறுக்கியது
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  • மிளகு - 1\2 டீஸ்பூன்
  • சீரகம் - 1\2 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • அரிசி மாவு - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - பொரிப்பதற்கு

விருப்பப்பட்டால்

  • பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  • துருவிய தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்
  • நறுக்கிய கேரட் - 1 டேபிள்ஸ்பூன்
35
செய்முறை
  • ஒரு அகலமான பாத்திரத்தில் 2 கப் இட்லி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையை சேர்க்கவும்.
  • அதனுடன் மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • இட்லி மாவில் 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு சேர்ப்பது வடை வெளிப்புறம் சற்று மொறுமொறுப்பாக வர உதவும்.
  • மாவை நன்றாக பிசைந்து கலக்கவும். மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிதளவு இட்லி மாவு சேர்க்கலாம். தண்ணீர் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.
45
பொன்னிறமாக பொறிக்கவும்
  • கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். எண்ணெய் சரியான பதத்தில் இருக்கிறதா என்பதை அறிய சிறிதளவு மாவை எண்ணெயில் போட்டு பார்க்கலாம். மாவு உடனடியாக மேலே வந்து மெதுவாக பொரியத் தொடங்கினால் எண்ணெய் தயாராக உள்ளது.
  • கைகளை லேசாக தண்ணீரில் நனைத்து சிறிதளவு மாவை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • உள்ளங்கையில் வைத்து நடுவில் கட்டைவிரலால் சிறிய ஓட்டை போட்டு மெதுவாக எண்ணெயில் விடவும்.
  • ஒரே நேரத்தில் அதிக வடைகளை எண்ணெயில் போட வேண்டாம். கடாயின் அளவுக்கு ஏற்ப சில வடைகளை மட்டும் போட்டு, மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
  • வெளிப்புறம் நன்றாக மொறுமொறுப்பாக மாறியதும் எடுத்து டிஷ்யூ பேப்பரில் வைத்து அதிகப்படியான எண்ணெயை வடிக்கவும்.
55
சுவையான இட்லி மாவு மெதுவடை தயார்

சூடான மெதுவடையை தேங்காய் சட்னி, புதினா சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறலாம். விருப்பப்பட்டால் மேலே சிறிதளவு வெங்காயம், கொத்தமல்லித்தழை தூவி பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும். இப்படி மீதமாகும் இட்லி மாவை வீணாக்காமல், சில நிமிடங்களில் சுவையான மாலை நேர சிற்றுண்டியாக மாற்றலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories