
தென் இந்தியாவின் அடையாளமான பஞ்சு இட்லியும், வடஇந்தியாவின் ராஜ உபசரிப்பான பட்டர் சிக்கனும் ஒரே தட்டில் கை கோர்த்தால் எப்படி இருக்கும்? நினைத்துப் பார்க்கவே விசித்திரமாக இருக்கும் இந்த இணைப்பை நிஜமாக்கி, 'பட்டர் சிக்கன் ஸ்டஃப்டு இட்லி' (Butter Chicken Stuffed Idli) என்ற பெயரில் ரூ.179-க்கு விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது ஒரு நிறுவனம். தற்போது இந்த உணவு இணையத்தில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.
பொதுவாக 'இட்லி' என்றாலே தட்டுகளில் ஆவி பறக்க வரும் மென்மையான வெள்ளை மல்லிகை பூ, தொட்டுக்கொள்ளக் காரசாரமான சாம்பார் மற்றும் தேங்காய் சட்னி தான் நம் நினைவுக்கு வரும். அரிசியும் உளுந்தும் புளிக்க வைக்கப்பட்டு, ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கப்படும் இந்த உணவு தென்னிந்தியர்களின் அன்றாட உணர்வுகளோடு கலந்தது. மறுபுறம், பட்டர் சிக்கன் என்பது நாவில் எச்சில் ஊறவைக்கும் கிரீமியான மசாலா சுவை கொண்ட வடஇந்தியப் பிரபலம்; இது வழக்கமாக நாண், பரோட்டா அல்லது ஜீரா ரைஸுடன் மட்டுமே பரிமாறப்படும்.
இந்த 2 உணவுப் பாரம்பரியங்களையும் தலைகீழாக மாற்றி, இட்லிக்குள்ளேயே பட்டர் சிக்கனை அடைத்து விற்கத் தொடங்கியுள்ளது 'ஸ்விஷ்' (Swish) என்ற 10 நிமிட உணவு டெலிவரி ஸ்டார்ட்-அப் நிறுவனம். பெங்களூரு, குருகிராம் மற்றும் நொய்டா பகுதிகளில் செயல்படும் இந்நிறுவனத்தின் மெனுவில், இந்த உணவு ரூ.179 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஒரு தட்டில் ஆறு இட்லிகள் வைக்கப்பட்டு, அதில் இரண்டைப் பாதியாகப் பிளந்தால் உள்ளிருந்து அடர் ஆரஞ்சு நிறத்தில் பட்டர் சிக்கன் மசாலா எட்டிப் பார்க்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்வையாளர்களை உலுக்கியுள்ளது.
'வன்ஷ்' (Vansh) என்ற சமூக வலைதளப் பயனர், இந்த உணவின் புகைப்படத்தைப் பகிர்ந்து ஸ்விஷ் நிறுவனத்தைத் டேக் செய்து வெளியிட்ட பதிவுதான் இந்த விவாதத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டது. அவர் தனது பதிவில், இதைக் கண்டுபிடித்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி என்று நகைச்சுவையாகவும் காட்டமாகவும் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவு காட்டுத்தீயாகப் பரவ, இணையவாசிகளும் களம் இறங்கினர். தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவான இட்லியின் புனிதத்தைக் கெடுக்காதீர்கள், இட்லியை அதன் இயல்பான வடிவிலேயே விட்டுவிடுங்கள், இப்படிப்பட்ட விபரீதப் பரிசோதனைகள் தேவையா? எனப் பாரம்பரிய உணவுப் பிரியர்கள் கொந்தளித்தனர்.
சமையல் புரட்சியா? விபரீதப் பரிசோதனையா?
எதிர்ப்புகள் ஒருபுறம் இருக்க, உணவில் புதுமைகளை விரும்புவோர் இதற்கு ஆதரவுக் குரலும் கொடுத்துள்ளனர். ஒரு பயனர், இது ஆசிய நாடுகளில் பிரபலமாக இருக்கும் சிக்கன் அடைக்கப்பட்ட பாவ் பன் (Bao Bun) போன்ற ஒரு வடிவம்தான். சுவைத்துப் பார்க்காமலேயே தேவையில்லாமல் ஏன் குறை கூறுகிறீர்கள்? பார்க்கவே சுவையாக இருக்கிறது. நாம் கறி தோசை, சிக்கன் தோசை சாப்பிடுவதில்லையா? பிறகு இட்லிக்குள் சிக்கன் வைத்தால் மட்டும் என்ன தவறு? என்று லாஜிக்காகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த உணவை நேரில் ஆர்டர் செய்து சுவைத்த சிலர், இதன் காம்பினேஷன் உண்மையில் நன்றாகவே இருப்பதாகத் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். இதனால், இது வரவேற்கத்தக்க சமையல் புதுமையா அல்லது தேவையற்ற சர்ச்சையா என்ற பட்டிமன்றமே இணையத்தில் நடந்து வருகிறது.
சமீபகாலமாக வாடிக்கையாளர்களைக் கவரவும், சமூக வலைதளங்களில் வைரலாகவும் உணவகங்கள் பல்வேறு விநோதக் கலவைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. குலாப் ஜாமுன் பீட்சா, மசால் தோசை பர்கர், பிரியாணிக்குள் ஐஸ்கிரீம் எனப் பல சோதனைகள் நடப்பதுண்டு.
இத்தகைய முயற்சிகள் உணவுப் பிரியர்களுக்குப் புதிய சுவை அனுபவத்தைத் தந்தாலும், பாரம்பரிய உணவுகளின் அசல் தன்மையும் தயாரிப்பு முறையும் மாறாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பவர்களின் ஆதங்கத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
ரூ.179 கொடுத்துச் சாப்பிடலாமா?
பாரம்பரிய இட்லி மற்றும் பட்டர் சிக்கன் காம்போவை ஒருசேர ருசிக்க நினைப்பவர்களுக்கு இது நிச்சயமாக ஒரு புதிய அனுபவமாக அமையலாம். ஆனால், இட்லியைச் சாம்பார் மற்றும் கெட்டிச் சட்னியுடன் மட்டுமே ரசித்து ருசிக்கும் நபர்களுக்கு இந்த முயற்சி அதிர்ச்சியைத் தரக்கூடும்.
இணையத்தில் எழுந்துள்ள இந்த விவாதம் உணவின் சுவையை விட, அதன் விநோதமான தோற்றத்தாலேயே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த 'பட்டர் சிக்கன் இட்லி' வாடிக்கையாளர்களின் நாவை வென்று மெனுவில் நிலைத்து நிற்குமா அல்லது இணையத்தில் சில காலம் பேசப்பட்டு மறைந்துவிடுமா என்பதை மக்களின் சுவை ரசனையும் அதன் விற்பனையும்தான் தீர்மானிக்கும்.