தற்போது பலர் அசைவ உணவுகளை காட்டிலும், சைவ உணவுகளையே விரும்புகின்றனர். பால் அருந்துவது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் பசுவின் பால் பலருக்கு பால் பிடிக்கவே பிடிக்காது. உடல் ஆரோக்கியம் மேம்பட தினமும் ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்களும், சுகாதார நிபுணர்களும் கூறுகின்றனர். பசும் பால் குடிக்க விரும்பாதவர்களுக்கு சோயா பால் அனைத்து நன்மைகளையும் வழங்கும். சோயாபீன்ஸில் இருந்து மட்டுமே இந்தப் பால் தயாரிக்கப்படுகிறது.
இந்த பாலில் கலோரிகள் மிகவும் குறைவு. ஆனால் புரதச்சத்து, கால்சியம், பொட்டாசியம் நிறைந்துள்ளது. லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு சோயா பால் சிறந்த மாற்றாகும். சோயா பால் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இங்கு பார்க்கலாம்.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
கால்சியம் சத்து அதிகம் கிடைக்க சோயா பால் அருந்தலாம். இதனால் எலும்புகள் பலப்படும். சோயா பாலை தவறாமல் அருந்தும்போது உங்கள் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், பல ஆய்வுகள் சோயா பால் இந்த ஆபத்தை குறைக்கும் என்று சுட்டி காட்டுகின்றன.
இதயத்திற்கு நல்லது
சோயா பாலில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. சோயா பாலை தவறாமல் அருந்துவதால் இதய அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும். பிளாஸ்மா லிப்பிட் அளவை மேம்படுத்தவும் உதவுகிறது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது எதிர்காலத்தில் இதய நோய் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது.
எடை குறைக்க உதவுகிறது
சோயா பாலில் புரதம், நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால்தான் இந்த சோயா பால் உடல் எடையை வேகமாக குறைக்கும் என நிபுணர்கள் ஆணித்தரமாக கூறுகின்றனர். உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும். சோயா பால் உட்கொள்வது உங்கள் தசையை இறுக்கமாக செய்து கூடுதல் கிலோவைக் குறைக்க உதவும்.
சரும பாதுகாப்பு
சோயா பால் உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சோயா பால் அருந்தினால் ஹைப்பர் பிக்மென்டேஷன் குறையும். இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. இது உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். சோயா பால் உட்கொள்வதால் கரும்புள்ளிகள் குறைந்து தோலில் நிறமாற்றம் ஏற்படுகிறது. வயதாகும் அறிகுறிகளை குறைக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.