கோடைக்காலம் சருமத்திற்கு ஏற்ற பருவம் இல்லை. அதிகமான வெப்பத்தால் முகத்தில் பருக்கள், தடிப்புகள், ஒவ்வாமை ஏற்படும். முகமும் வழக்கத்தை விடவும் ரொம்ப கருத்துவிடும். இதை தடுக்க சன்ஸ்கிரீன், பருத்தி ஆடைகள் போன்றவை ஓரளவு உதவலாம். அடுத்தபடியாக, உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். சருமம் வறண்டு போகக் கூடாது. ஆனால் சூரிய ஒளியை சந்தித்து தானே ஆகவேண்டும். இந்த சூழலில் சில ஸ்க்ரப் முறைகள் நம்முடைய சருமத்தை பாதுகாக்கும். அதை இங்கு காணலாம்.
Image: Getty Images
அரிசி மாவு- தேன் ஸ்க்ரப்
சருமத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும் பண்புகள் தேனில் காணப்படுகிறது. 2 ஸ்பூன் அரிசி மாவு, அதனுடன் கொஞ்சம் தேன் சேர்த்து அந்த பேஸ்டை முகத்தில் பூசிக்கொள்ளுங்கள். இதனை 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் பளபளப்பாகும்.
Image: Getty Images
எலுமிச்சை-சர்க்கரை ஸ்க்ரப்
எலுமிச்சை தோலில் பளபளப்பை கொடுக்கிறது. சர்க்கரை இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை, கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இந்த ஸ்க்ரப்பை உங்கள் முகத்தில் தடவி சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்துவிடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
தக்காளி-ஓட்ஸ் ஸ்க்ரப்
தக்காளியில் லைகோபீன் உள்ளது. இது தோல் சேதத்தை சரிசெய்யும். 2 ஸ்பூன் பொடித்த ஓட்ஸ், 2 ஸ்பூன் தக்காளி சாறு ஆகியவை கலந்து பேஸ்ட் செய்து, உங்கள் சருமத்தில் தடவவும். அதை மெதுவாக மசாஜ் செய்து சில நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும்.
பப்பாளி-தேன் ஸ்க்ரப்..
வீட்டில் எளிமையாக தயார் செய்யும் இந்த ஸ்க்ரப் சருமத்தை பொலிவாக வைத்திருக்கும். வெயிலில் கருத்து போகும் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும். கோடைகாலத்தில் தோலை ஈரப்பதமாக வைத்திருக்க பப்பாளியும் தேனும் நல்ல தேர்வு. சில துண்டுகள் பப்பாளியை எடுத்து, நன்கு பேஸ்ட் போல மசித்து கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். சில நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் புத்துணர்வுடன் இருக்கும்.
மஞ்சள்- கடலை மாவு ஸ்க்ரப்
மஞ்சளில் குர்குமின் என்ற பொருள் உள்ளது. இது சருமம் கருத்து போவதை குறைக்க உதவுகிறது. 2 ஸ்பூன் கடலை மாவில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் பால் ஊற்றி பேஸ்ட் போல எடுத்து கொள்ளுங்கள். இதனை முகத்திலும், வெயிலால் கருத்து போன பிற பகுதியிலும் பூசி கொள்ளுங்கள். கொஞ்ச நேரம் அப்படியே விட்டுவிட்டு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.