
தலைமுடி பராமரிப்பில் முக்கிய பங்கு வைப்பது ஷாம்பு. நாம் ஒவ்வொருவரும் குளிக்கும் போது கண்டிப்பாக ஏதேனும் ஒரு ஷாம்பு பயன்படுத்துபவராக இருப்போம். ஒருவேளை ஷாம்பு பயன்படுத்தாதவர்கள் சீயக்காய் பயன்படுத்தலாம். ஆனால் தலைமுடிக்கு கண்டிப்பாக ஏதேனும் ஒரு பொருளை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் தலை முடிக்கு எப்போதெல்லாம் ஷாம்பு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. சிலர் தினமும் ஷாம்பு போட்டு குளிப்பார்கள். சிலர் வாரம் ஒருமுறை மட்டும் அதை பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இந்த பதிவில் தலைமுடியை பராமரிக்க ஷாம்புவை எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை காணலாம்.
தினமும் தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்துவதால் வியர்வை, அழுக்கு, எண்ணெய் பிசுக்கு போன்றவை நீங்கி உச்சந்தலை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். தலைமுடியில் எந்த அழுக்கும் சேராமல் துர்நாற்றம் வீசாமல் முடியை பராமரிக்க தினமும் ஷாம்பு உபயோகப்படுத்தலாம்.
- பொதுவாக நம்முடைய உச்சந்தலையில் முடியை ஈரப்பதமாக வைக்கக்கூடிய ஒரு வித இயற்கை எண்ணெய் உற்பத்தியாகும். இது தலைமுடியை எண்ணெய் பசையாகவும், தளர்வாகவும் வைத்திருக்கும். தினமும் ஷாம்பு போட்டு குளித்தால் எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுகிறது. இது அனைவருக்கும் பொருந்தாது. எண்ணெய் பசை உள்ள கூந்தல் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
- சிலருக்கு தலையில் அதிகப்படியான எண்ணெய் வியர்வை போன்றவை படிவதால் பொடுகு அரிப்பு பூஞ்சை தொற்று போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும் அவர்கள் தினமும் ஷாம்பு உபயோகிப்பது அந்த பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.
- தினமும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை எதிர்கொள்பவர்கள் தினமும் ஷாம்பு போட்டு குளிப்பது தலைமுடியை அழுக்கில் இருந்து பாதுகாக்கும்.
தினமும் ஷாம்பு போடுவது அல்லது அடிக்கடி ஷாம்பு போட்டு குளிப்பது தலையில் உள்ள இயற்கை எண்ணெய்களை நீக்கி முடியை வறட்சியாக்கும். இதனால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படலாம். அதிக ரசாயனங்கள் உள்ள ஷாம்பு உச்சந்தலையில் எரிச்சலை உண்டாக்கலாம். தலைமுடியில் ஈரப்பதம் நீங்குவதால் சிவத்தல், அரிப்பு, உரிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். முடியை பலவீனமாக்கும்.
சுருள் முடி கொண்ட பலர் வாரம் ஒரு முறை மட்டுமே ஷாம்பு உபயோகிக்க விரும்புகிறார்கள். இதனால் உச்சந்தலையின் இயற்கை எண்ணெய்கள் நீங்காமல் முடியை பாதுகாக்க உதவும். முடியை வாரம் ஒரு முறை மட்டுமே ஷாம்பு போட்டு கழுவுவதால் இயற்கை எண்ணெய் முடியில் பரவ வாய்ப்பளிக்கிறது. இதனால் முடி உதிர்வு குறைகிறது. ஷாம்புகளில் உள்ள சல்பேட்டுகள், பாரபெண்கள் முடியை வறட்சிக்குள்ளாக்கும். மாறாக அவ்வப்போது ஷாம்பு பயன்படுத்துவதால் முடி வலிமையாக இருக்கும்.
எண்ணெய் பசையுள்ள முடி உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தலைமுடியைக்கு ஷாம்பு போட்டால் தலைமுடியை எண்ணெய் பசையாகவே இருக்கும். அடர்த்து குறைவாகிவிடும். வாரம் ஒரு முறை ஷாம்பு பயன்படுத்துவதால் வியர்வை இறந்த செல்கள் உள்ளிட்டவை உச்சந்தலையில் படிந்து எரிச்சல் அரிப்பு பொடுகு போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
- இயற்கையாகவே எண்ணெய் பசையுள்ள முடியை கொண்டவர்கள் அதிகப்படியான எண்ணெய் சுரப்பை தடுக்க இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஷாம்பு பயன்படுத்தலாம்.
- வறட்சியான அல்லது சுருள் முடி கொண்டவர்கள் ஈரப்பதத்தை தக்கவைக்க, முடி உதிர்வதை குறைக்க வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே ஷாம்பு பயன்படுத்துவது நல்லது.
- அடர்த்தி குறைவான மெல்லிய முடி விரைவில் எண்ணெய் பசையை உறிஞ்சி கொள்ளும். இவற்றை ஒன்று அல்லது இரண்டு நாளுக்கு ஒருமுறை கழுவுவது சிறந்தது.
- அடர்த்தியான அல்லது கரடுமுரடான முடி இருப்பவர்கள் வாராத்தில் 1 முறை ஷாம்பு போடலாம். சல்பேட் இல்லாத ரசாயனம் குறைவாக கொண்ட ஷாம்புவைப் பயன்படுத்துவது நல்லது.