
நடிகர் மாதவன் சமீபத்தில் தான் எப்படி உடற்பயிற்சியோ அல்லது ரன்னிங்கோ இல்லாமல் உடல் எடையை குறைத்தேன் என்பது குறித்து பேசி இருந்தார். மேலும் தனது உடல் எடை குறைப்பின் ரகசியம் இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் (intermittent fasting ) என்றும் கூறியிருந்தார். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் இந்த ஃபாஸ்டிங் முறையை பின்பற்றவும், உணவை 45-60 முறை நன்றாக மென்று சாப்பிடவும் அவர் அறிவுறுத்தினார். மேலும் இரவு உணவை மாலை 7 மணிக்கு முன்பாக சாப்பிடவும் அறிவுறுத்தினார்.
அதுமட்டுமின்றி அதிகாலை நடைப்பயிற்சி, ஆழ்ந்த உறக்கம், படுக்கைக்கு 90 நிமிடங்களுக்கு முன் போன் பார்ப்பதை தவிர்ப்பது மற்றும் அதிகளவில் திரவ ஆகாரங்களை உட்கொள்வது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நடிகர் வலியுறுத்தியுள்ளார். அதிகளவில் காய்கறிகளை சாப்பிடவும், ஆரோக்கியமான உணவு சாப்பிடவும் மாதவன் பரிந்துரைத்தார். பதப்படுத்தப்பட்ட உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) பகிர்ந்துள்ள ஒரு ஆய்வுக் கட்டுரையின்படி, குறிப்பிட்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எடை இழப்பு போன்ற பிற ஆரோக்கிய நலன்களுக்கான உண்ணாவிரதம் பற்றிய ஆராய்ச்சி நடந்து வருகிறது..
இடைப்பட்ட விரதம் என்றால் என்ன?
இடைப்பட்ட உண்ணாவிரதம் என்பது உடல் எடையை குறைக்க பின்பற்றபப்டும் உணவு உண்ணும் முறையாகும். குறிப்பிட்ட நேர இடைவெளியில் மட்டுமே உணவு சாப்பிடுவது. 12 முதல் 20 மணிநேரம் வரை சாப்பிடாமல் இருக்க வேண்டும்., நீங்கள் சர்க்கரை அல்லது பால் இல்லாமல் தண்ணீர், தேநீர் அல்லது காபி குடிக்கலாம். மிகவும் பொதுவான நடைமுறை 16/8 முறை, இதில் நீங்கள் 16 மணி நேரம் எதுவும் சாப்பிடக் கூடாது. மீதமிருக்கும் 8 மணி நேரத்தில் சாப்பிடலாம். இந்த டயர் முறையில் பல்வேறு வழிகள் இருந்தாலும் இதுவே பெரும்பாலானோர் பின்பற்றும் வழியாக உள்ளது.
மிகவும் தீவிரமான டயட்டில், வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை 24 மணிநேரம் உண்ணாவிரதம் கூட சில இருப்பார்கள்.. உதாரணமாக, நீங்கள் இரவு 7 மணிக்கு இரவு உணவை சாப்பிட்டால் அடுத்த நாள் இரவு 7 மணி வரை சாப்பிடக்கூடாது.
இந்த இடைப்பட்ட உண்ணாவிரதம் மூலம் உடலானது தானாகவே பழைய, சேதமடைந்த செல்களை சுத்தப்படுத்துகிறது மற்றும் புதிய, ஆரோக்கியமான செல்களை உருவாக்க அவற்றின் பாகங்களை மறுசுழற்சி செய்கிறது. இது உங்கள் உடல் தன்னைத் தானே சுத்தம் செய்து, சரிசெய்து கொள்வதைப் போன்றது.
இடைப்பட்ட உண்ணாவிரதத்தின் போது, உங்கள் உடல் செல்களை சுத்தம் செய்வதிலும் சரி செய்வதிலும் கவனம் செலுத்துகிறது. இது உங்கள் உடலின் செல்களை புதியதாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. சேதமடைந்த செல்களை அகற்றுவது நோய்களைத் தடுக்கவும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கவும் உதவும்.
நீங்கள் இந்த இடைப்பட்ட உண்ணாவிரதம் இருக்கும் போது செல்லுலார் மற்றும் மூலக்கூறு நிலைகளில் உங்கள் உடலில் பல செயல்முறைகள் நிகழ்கின்றன. உதாரணமாக, உங்கள் உடல், சேமித்து வைக்கப்பட்டுள்ள உடல் கொழுப்பை அணுகக்கூடியதாக மாற்ற ஹார்மோன் அளவை மாற்றுகிறது. உங்கள் செல்கள் முக்கியமான பழுதுபார்ப்பு செயல்முறைகளை மேற்கொள்கின்றன.
ஆயுட்காலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் தொடர்புடைய மரபணுக்களின் செயல்பாட்டில் மாற்றங்கள் நிகழும். இடைப்பட்ட உண்ணாவிரதம், குறைவான அளவு உணவே உண்பதால் கலோரி நுகர்வும் குறைவாகிறது. இது எடை குறைப்பை எளிதாக்குகிறது. மேலு ண்ணாவிரதம் மூளையின் ஹார்மோனை அதிகரிப்பதுடன், நரம்பு செல் பெருக்கத்திற்கு உதவலாம். இது அல்சைமர் நோய்க்கு எதிரான பாதுகாப்பையும் வழங்கும்..