ஃபிஃபா உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவிடம் போராடித் தோற்ற நிலையில், கால்பந்து உலகையே உலுக்கும் ஒரு பகீர் குற்றச்சாட்டை எகிப்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன் முன்வைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸியும், அர்ஜென்டினாவும் இந்த தொடரில் நீடிக்க வேண்டும் என ஃபிஃபா விரும்பியதாகவும், போட்டியின் முடிவு வெளி சக்திகளால் முன்பே தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் ஹசன் குற்றம் சாட்டியுள்ளார். ப்ரீ-குவார்ட்டர் ஃபைனலில் நடந்த இந்த பரபரப்பான போட்டியில், இரண்டு கோல்கள் முன்னிலை பெற்றிருந்த எகிப்து அணி, இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.
உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றை நோக்கி எகிப்து சென்று கொண்டிருந்தபோது, ஆட்டத்தின் கடைசி 13 நிமிடங்களில் மூன்று கோல்களை அடித்து அர்ஜென்டினா முன்னேறியது. போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹொசாம் ஹசன், நடுவரின் செயல்பாடுகள் முற்றிலும் அர்ஜென்டினாவுக்கு சாதகமாக இருந்ததாகக் கூறினார்.