திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 1 வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 110 மாணவர்களும், 129 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் லட்சுமணன் ( 56) என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு முதல் பள்ளி மாணவிகளை அடிக்கடி அழைத்து தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக வெளியில் சொல்லக்கூடாது என மாணவிகளை மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், நாளுக்கு நாள் ஆசிரியரின் தொல்லை தாங்க முடியாததால் வேறு வழியில்லாமல் மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பெற்றோரிடம் கண் கலங்கிய படி தெரிவித்தனர். இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையித்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அப்படிடையில் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோரிடம் வீடு வீடாக சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிரியர் லட்சுமணன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து ஆசிரியர் லட்சுமணனை போலீசார் கைது செய்தனர். கைதான ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட 10 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளியில் படிக்கும் 24 மாணவிகளிடம் ஆசிரியரே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.