
1980-களில் தன்னுடைய தேனிசையால் தேசத்தையே கட்டிப்போட்டுக் கொண்டிருந்தார் இளையராஜா. அதுவரை யாருடனும் இணைந்து பணியாற்றாத அவர், ஆனந்த் எனும் படத்திற்காக 8 வயது சிறுவனை இணைத்துக்கொண்டார். இதுவே அப்போது சினிமா வட்டாரத்தில் ஹாட் டாப்பிக் ஆக இருந்தது. 8 வயதில் இசைஞானியுடன் கைகோர்த்த அந்த சிறுவன் பின் நாளில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் ஆனார்.
படத்தின் இசையமைப்பாளராக இவரின் பெயர் இருந்தாலே போதும் அந்த படம் தனி கவனம் பெற்றுவிடும். அப்படி மாஸ் ஹீரோவுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை கொண்ட ஒரு இசையமைப்பாளர் என்றே சொல்லலாம். 2 கே கிட்ஸையும் தன்னுடைய இசையை ரசிக்க வைத்து, தனது இசை போதைக்கு அடிமையாக்கி வைத்திருக்கும் அந்த பெருமைமிகு கலைஞர் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
1979-ம் ஆண்டு ஆகஸ்ட் 31ந் தேதி இளையராஜாவின் இசை குடும்பத்தில் ஒரு குழந்தையின் அழுகை இசையாய் ஒலிக்க தொடங்கியது. இளையராஜாவுக்கு யுவன் சங்கர் ராஜா என்கிற இளவரசன் பிறந்தார். சிறுவயதில் இருந்தே தன் தந்தையின் இசையமைப்பு வேலைகளை எல்லாம் அருகில் இருந்தே கண்டுமகிழ்ந்தார் யுவன். தொலைவில் இருந்து கற்றுவந்த யுவனை 8 வயதில் தன் அருகில் அமர வைத்து கற்றுக்கொடுத்தார் இளையராஜா.
இதையும் படியுங்கள்... மாரி செல்வராஜுக்கு கமல் மீது அப்படி என்ன கோபம்? பரியேறும் பெருமாள் தொடங்கி வாழை வரை தொடரும் உரசல்
யுவனுக்கு ஆரம்பத்தில் பைலட் ஆக வேண்டும் என்பது தான் ஆசையாக இருந்திருக்கிறது. ஆனால் 16 வயதில் தன் மகனின் இசைத் திறமையை பார்த்து வியந்த தாய் ஜீவா, இசைத்துறையில் முயற்சி செய்து பார் என தன் மகனை ஊக்குவித்துள்ளார். தாய் சொல்லை தட்டாத யுவனுக்கு திரைப்பட வாய்ப்புகளும் வர தொடங்கின. அவர் கடந்த 1997-ம் ஆண்டு வெளிவந்த அரவிந்தன் தான் யுவன் இசையில் வெளிவந்த முதல் படமாகும்.
பின்னர் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது. இதையடுத்து அஜித்தின் தீனா படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு யுவனுக்கு கிடைத்தது. அப்படத்தின் மூலம் அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறிய யுவன் அவரை வைத்து தொடர்ந்து பில்லா, மங்காத்தா, பில்லா 2 என வரிசையாக மாஸ் ஹிட் பாடல்களை கொடுத்தார்.
வஸந்த், பாலா, லிங்குசாமி, வெங்கட் பிரபு, தியாகராஜன் குமாரராஜா, ராம், விஷ்ணுவர்தன் என புகழ்பெற்ற இயக்குனர்களுக்கு பிடித்த இசையமைப்பாளராகவும் மாறினார் யுவன். சிங்கிள் டிராக் இசையை அறிமுகப்படுத்தியதும் யுவன் சங்கர் ராஜா தான். வானம் படத்தில் இடம்பெற்ற எவன்டி உன்ன பெத்தான் பாடல் தான் முதன்முதலில் வெளிவந்த சிங்கிள் டிராக் பாடலாகும்.
தற்போது விஜய்யுடன் பல வருடங்களுக்கு பின்னர் இணைந்து கோட் படத்தில் பணியாற்றியுள்ள யுவன், இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் ஒருபுறம் குவிந்து வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி தற்போது பார்க்கலாம். அதன்படி ஒரு படத்துக்கு இசையமைக்க ரூ.3 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்கும் யுவன் சங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இவர் இசையமைப்பாளராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பல்வேறு படங்களை தயாரித்து அதன் மூலமும் வருமான ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... 1 நிமிட விளம்பரத்துக்கு 1 கோடி; ரசிகர்களை விட எனக்கு பணம் முக்கியமில்லைனு உதறித்தள்ளிய அஜித்!!