
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடியும் கிடைக்காத பலர், சமூக ஊடகங்கள் மூலம் தங்களின் திறமையை வெளியுலகிற்கு கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் திரைப்படங்களில் பிரபலமான காட்சிகள், மற்றும் இண்டர்நெட்டில் வைரலாகும் வசனங்களை தனக்கே உரிய பாணியில் காமெடியாக பேசியும், நடித்தும், வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் தான் ராகுல் டிக்கி.
மிக குறுகிய காலத்தில், இவரது வீடியோக்கள் இன்ஸ்டாகிராம், யூடியூப், பேஸ்புக், போன்ற சமூக ஊடகங்களில் படு வைரல் ஆனது. இவரது திறமைக்கு சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தன. தன்னுடைய வாழ்க்கையில் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி இவர் நகரத்து கொண்டிருந்த போது தான், கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி இரவு, அவரது இருசக்கர வாகனத்தில் ஈரோடு அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில், சென்றுகொண்டிருந்தபோது இவரது வண்டி கட்டுப்பை இழந்து, விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதே இவரின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது. ஒருவேளை இந்த விபத்தில் சிக்கியபோது, ராகுல் ஹெல்மெட் அணிந்திருந்தால் கண்டிப்பாக உயிர் பிழைத்திருப்பார் என மருத்துவர்கள் கூறினார். இளம் வயதிலேயே ராகுல் இறந்தது, அவரது ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியது.
ராகுலின் மறைவுக்கு பின்னர், இவரின் அம்மா மற்றும் மனைவி என இருவர் தரப்பிலும் தற்போது வரை பல பிரச்சனைகள் நீடித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ராகுலின் அம்மா, கமிஷனர் அலுவலகத்தில் மருமகள் தேவிகா ஸ்ரீ பற்றி மகனை இன்ஸ்ட்டா ஐடியை வைத்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருவதாகவும், தன்னுடைய மகன் நினைவாக எந்த ஒரு பொருளுமே தன்னிடம் இல்லாத நிலையில், தேவிகா ஸ்ரீ வைத்திருக்கும் தன்னுடைய மகனின் பொருட்கள் அனைத்தையும் மீட்டு கொடுக்கும் படி புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து தொடர்ந்து கண்ணீருடன் பேசிய ராகுலின் அம்மா... " என் மகன் இறந்ததற்கு, அந்த பெண்ணும் (தேவிகா ஸ்ரீ) மற்றும் அவரின் அம்மா தான் காரணம். அந்த பெண் ஏற்கனவே ஒரு பையனுடன் தொடர்பில் இருந்துள்ளார். அது எங்களுக்கு தெரியாது. திருமணம் ஆன பின்னர் தனியாக குடித்தனம் சென்றனர். ஆனால் நான் வலுக்கட்டாயமாக அவர்களை தனியாக செல்ல சொன்னேன் என்று பொய் சொல்கிறார் அந்த பெண். என் மகனை பற்றி எனக்கு தெரியும். அவன் இறந்த பின்னர் இப்படி அபாண்டமாக அந்த பெண் பேசுகிறாள்.
அதே போல் தினமும் ரூ.500 கொடுத்து, நான் அவனை குடிக்க சொன்னதாக சொல்கிறார். எனக்கு கொடுமைக்கார மாமியார் என்று ஒரு பட்டம். என் மகன் இறந்த வேதனையில் இருந்து நான் இன்னும் மீண்டு வரவில்லை. அவன் இறந்த பின்னர் அவனை என்னால் தொட்டு கூட பார்க்கமுடியவில்லை. அவனை என் குடும்ப வழக்கப்படி, இஸ்லாம் முறையில் தான் அடக்கம் செய்தோம். அவன் ஆசை பட்டபடி ஒரு தமிழ் பெண்ணை தான் நான் அவனுக்கு திருமணம் செய்து வைத்தேன்.
அந்த பெண் என்னுடைய மகனின் நகைகள், ட்ரோப்பி போன்ற அனைத்தையும் எடுத்து சென்றுவிட்டார். இப்போதைக்கு என் மகன் நினைவாக என்னிடம் எதுவுமே இல்லை. எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதால் இங்கு வந்துள்ளேன். எனக்கு உடலில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. என் கணவரும் இதய நோயாளி. எங்களை பார்த்து கொள்வதற்கு கூட யாரும் இல்லை.
எனக்கு என்னுடைய மகனின் பொருட்கள் அனைத்தும் வேண்டும். என்னுடைய மகனின் இன்ஸ்டாஐடியை பயன்படுத்தி அந்த பெண் பணம் சம்பாதித்து கொண்டு இருக்கிறாள். நாங்கள் வயதான காலத்தில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம். அந்த பெண்ணிடம் கேட்டல் நீ எங்கு வேண்டுமானாலும் போ... என்னவேனாலும் செய் என்று பேசுகிறாள். அதே போல் என்னை பற்றி பல பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
என் மகனின் ஐடியில் அசிங்கசிங்கமாக வருகிறது, அதனால் எங்களால் வெளியே தலைகாட்ட முடியவில்லை. நாங்கள் வேலைக்கு சென்றால் அங்கும் இது பற்றி கேட்கிறார்கள். ஒருவேளை அவனுடைய இன்ஸ்டாகிராம் ஐடியை கொடுக்கவில்லை என்றால், அதை குளோஸ் பண்ண வேண்டும். என கண்ணீருடன் உருக்கமாக கூறியுள்ளார். இந்த புகார் தொடர்பாக கூடிய விரைவில் தேவிகா ஸ்ரீயிடம் விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது. ராகுல் டிக்கியின் ஐடியில் தற்போது தேவிகா காமெடியாக பேசி ரீலிஸ் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.