Toxic Box Office : யாஷ் நடித்துள்ள 'டாக்ஸிக்' படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பொறுத்தவரை, அட்வான்ஸ் புக்கிங்கில் ரூ.64 கோடி வசூலித்துள்ளதால், உலகளவில் ரூ.100 கோடி கிளப்பில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த கேங்ஸ்டர் ஆக்ஷன் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததால், அதிகாலை முதலே பல்வேறு இடங்களில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்த நிலையில், பல பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’, இந்திய சினிமாவின் பிரம்மாண்டமான தயாரிப்புகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.
பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை கண்காணிக்கும் சாக்னில்க் தகவல்படி, ‘டாக்ஸிக்’ படத்திற்கு இந்திய அளவில் வெளியீட்டுக்கு முன்பான முன்பதிவிலேயே சுமார் ரூ.64.85 கோடி கிராஸ் வசூல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதேபோல் புக் மை ஷோ தளத்தில் மட்டும் 7 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முன்பதிவு வேகம், ‘ஜவான்’, ‘கல்கி 2898 ஏடி’ உள்ளிட்ட முன்னணி படங்களின் சாதனைகளுடன் ஒப்பிடப்படும் அளவுக்கு சென்றுள்ளது. இதனால் முதல் நாள் வசூல் குறித்த எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது.
34
மாநில வாரியாக எதிர்பார்ப்பு
கர்நாடகாவில் ‘டாக்ஸிக்’ படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் படம் திரையிடப்படுவதுடன், நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த சில திரையரங்குகளும் இப்படத்தின் வெளியீட்டால் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தி பேசும் வட இந்திய சந்தையிலும் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு முதல் நாளில் மட்டும் ரூ.30 முதல் ரூ.40 கோடி வரை வசூல் கிடைக்க வாய்ப்புள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளிலும் ‘டாக்ஸிக்’ படத்தின் முன்பதிவு வேகம் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் அட்வான்ஸ் புக்கிங் சாதனையை இப்படம் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டு சந்தையிலும் யாஷ்ஷின் படத்திற்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் மட்டும் 400-க்கும் அதிகமான திரைகளில் படம் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கன்னட திரைப்படம் இத்தனை அதிகமான திரைகளில் வெளியாகியிருப்பது இதுவே முதல்முறை என்ற பெருமையையும் ‘டாக்ஸிக்’ பெற்றுள்ளது.
முன்பதிவு நிலவரம், திரையரங்கு எண்ணிக்கை மற்றும் ரசிகர்களின் வரவேற்பை கணக்கில் எடுத்துக்கொண்டால், ‘டாக்ஸிக்’ திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.100 கோடி முதல் ரூ.120 கோடி வரை வசூல் செய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. டாக்ஸிக் படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனம் கடைசியாக தயாரித்திருந்த விஜய்யின் ஜனநாயகன் படம் முதல் நாள் 80 கோடி வசூலித்து இருந்தது. அந்த சாதனையை டாக்ஸிக் முறியடிக்கும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய யாஷ், ‘டாக்ஸிக்’ வழக்கமான கேங்ஸ்டர் படமாக இருக்காது என குறிப்பிட்டிருந்தார். படம் தைரியமான மற்றும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருப்பதாகவும், மனிதர்களின் மனநிலை, உறவுகளில் இருக்கும் இருண்ட பகுதிகள் மற்றும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்களை மையமாகக் கொண்டு கதை நகரும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
கன்னட சினிமாவில் இருந்து ‘கே.ஜி.எஃப்’ படங்களின் மூலம் இந்திய அளவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய யாஷ், தற்போது ‘டாக்ஸிக்’ மூலம் அந்த எல்லையை மேலும் விரிவுபடுத்தியுள்ளார். கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் சர்வதேச சந்தைகளிலும் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு, யாஷ்ஷின் பான்-இந்தியன் மார்க்கெட்டை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.