
தனது கதையை திருடி இயக்குனர் ஷங்கர் எந்திரன் திரைப்படத்தை எடுத்ததாக ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், இந்த எந்திரன் கதை திருட்டை காரணம் காட்டி, இயக்குனர் ஷங்கரின் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி இருக்கிறது. ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டதன் பின்னணி பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
யார் இந்த ஆரூர் தமிழ்நாடன்?
கவிஞர், கதை ஆசிரியர், எழுத்தாளர், மேடைப் பேச்சாளர் என பன்முகங்களை கொண்டவர் ஆரூர் தமிழ்நாடன். ஏராளமான இலக்கிய படைப்புகளை எழுதியிருக்கும் இவர், 1996-ம் ஆண்டு இணைய உதயம் இதழில் ரோபோவை மையமாக வைத்து ‘ஜூகிபா’ என்ற கதையை எழுதினார். இதே கதை 2007-ல் வெளியான அவரது ‘திக் திக் தீபிகா’ என்கிற கதை தொகுப்பிலும் பிரசுரம் ஆனது. இந்த நிலையில், 2010-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில், கலாநிதி மாறன் தயாரிப்பில் பிரம்மாண்ட படமாக எந்திரன் வெளியானது.
இந்த படத்தை பார்த்த தமிழ்நாடன் தனது கதையான ஜூகிபாவை திருடி எந்திரன் படம் எடுக்கப்பட்டதை அறிந்து அதிர்ந்துபோனார். இதனால் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் கொடுத்திருக்கிறார் தமிழ் நாடன், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததால் இயக்குனர் ஷங்கருக்கும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் ஆரூர் தமிழ்நாடன். இதற்கு அவர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதையும் படியுங்கள்... எந்திரன் படத்தில் இப்படி ஒரு மிஸ்டேக் இருக்கா? 14 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட ஷங்கரின் கோல்மால் வேலை
எந்திரன் கதை திருட்டு வழக்கு
வக்கீல் நோட்டீஸுக்கு பதில் வராததால் இயக்குனர் ஷங்கர் மீதும், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீதும் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆரூர் தமிழ்நாடன். அதேபோல் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார் தமிழ்நாடன். இந்த வழக்கில் ஆஜராகுமாறும் ஷங்கர் மற்றும் கலாநிதி மாறனுக்கு கடந்த 2011-ம் ஆண்டு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
அந்த சம்மனை அடுத்து இயக்குனர் ஷங்கரும், கலாநிதி மாறனும் தாங்கள் கதையை திருடவில்லை என கூறியதோடு, அந்த கிரிமினல் வழக்கு செல்லாது என உத்தரவிடும்படி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து எழும்பூர் நீதிமன்ற வழக்கிற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. எந்திரன் கதை திருட்டு தொடர்பான சிவில் வழக்கு 10 வருடங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், 2019-ம் ஆண்டு ஜூன் 6ந் தேதி நீதிபதி புகழேந்தி அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தப்பித்த கலாநிதி மாறன்
அந்த தீர்ப்பில், கலாநிதி மாறன் தயாரிப்பாளர் தான், அவருக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்பதால் அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக உத்தரவிடப்பட்டது. அதே சமயம் இயக்குனர் ஷங்கருக்கு கதை திருட்டில் முகாந்திரம் இருப்பதால், அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ஆரூர் தமிழ்நாடனின் ஜூகிபா கதைக்கும் எந்திரன் படத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன, மேலும் காப்புரிமை மீறல் அப்பட்டமாக தெரிகிறது என்பதால், இந்த வழக்கை காப்புரிமை மீறல் சட்டத்தின்படி தொடர்ந்து நடத்தலாம் என அழுத்தமாக தெரிவித்தார்.
சிக்கிய ஷங்கர்
கூடுதலாக ஜூகிபா கதைக்கும் எந்திரன் படத்துக்குமான 16 ஒற்றுமைகளையும் பட்டியலிட்டு காட்டினார் நீதிபதி புகழேந்தி. இப்படி தொடர்ந்து 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் எந்திரன் கதை திருட்டு வழக்கில் தற்போது இயக்குனர் ஷங்கரின் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி உள்ளது. இயக்குனர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.10 கோடியே 11 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களை முடக்கி உள்ளதாக அறிவிப்பும் வெளியாகி உள்ளது. எந்திரன் படத்துக்காக இயக்குனர் ஷங்கர் பெற்ற பணத்திற்கு சமமான சொத்துக்களை தான் தற்போது அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. ஒருவேளை இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் குற்றவாளி என உறுதியானால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாம்.
இதையும் படியுங்கள்... இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்து முடக்கம்! என்ன காரணம்?