தளபதி67
வாரிசு படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து விஜய், தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள தளபதி67 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இரண்டாவது முறையாக இணைந்துள்ள 'தளபதி67' படம் குறித்து நேற்று, இந்த படத்தில் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் அறிக்கை வெளியிட்டு தெரிவித்தது.
இதில் மூன்றாவது முறையாக தளபதி விஜய்யுடன் இணைவது மிகவும் மகிழ்ச்சி என்றும், படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிக்கப்பட்ட நிலையில், விரைவில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சய் தத்
இதுகுறித்த அறிவிப்பு போஸ்டரில், தளபதி 67 கதை கேட்டு சஞ்சய் தத் என்ன சொன்னார் என்பதை பதிவிட்டுள்ளனர். அதன்படி “தளபதி 67 படத்தின் ஒன் லைன் கேட்டதுமே இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இந்த பயணத்தை தொடங்க ஆவலோடு உள்ளேன்” என்று சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
பிரியா ஆனந்த்
தளபதி67 படத்தில் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி. நம்பமுடியாத நடிகர் மற்றும் நடிகைகளுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக மிர்ச்சி சிவா, சிவகார்த்திகேயன், விமல், கௌதம் கார்த்திக் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்த பிரியா ஆனந்த் முதல் முறையாக தளபதி விஜய் இணைந்து தளபதி67 படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாண்டி மாஸ்டர்
இந்தப் படத்தில் என்னவொரு ஆச்சரியமான விஷயம் என்றால், சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார். இதுவரையில், ஒரு சில படங்களில் மட்டும் நடித்து, பாடல்களுக்கு நடனம் அமைத்துக் கொண்டிருந்த சாண்டி மாஸ்டர் தளபதி67 படத்தில் இணைந்துள்ளார். எனக்கு நானே என்னை ஒரு நடிகராக பார்ப்பது எல்லாம் புதுசு. நான் எவ்வளவு வியப்பாக இருக்கிறேன் என்று வெறும் வார்த்தையால் விவரிக்க முடியாது என்று சாண்டி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
மிஷ்கின்
யூத் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து பணியாற்றுகிறேன். அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. அப்போது எப்படி அண்ணா என்று அழைத்தாரோ அதே போன்று தான் இப்போதும் அழைக்கிறார். இந்த உடம்பை வைத்தே அவருடன் சண்டைக் காட்சியில் நடித்திருக்கிறேன். வாய் எல்லாவற்றையும் அடித்து உடைத்துவிட்டார். இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் எந்தவித பதற்றமும் இல்லாமல் படத்தை தெளிவாக இயக்குகிறார். ஒவ்வொரு காட்சியையும் நுட்பமாக எடுத்துக் கொடுக்கிறார். தளபதி67 படத்தின் மூலமாக உங்கள் அனைவரையும் திரையரங்கில் சந்திக்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மன்சூர் அலி கான்
மின்சார கண்ணா, நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன், தேவா மற்றும் வசந்த வாசல் ஆகிய படங்களைத் தொடர்ந்து மன்சூர் அலி கான் இந்தப் படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: யாணும் இணைந்தேன், தளபதி67ல் லோகேஷ் நீ ஆர்ப்பரித்தெழு திரையில் விரைவில் சந்திப்போம் மக்களே என்று பதிவிட்டுள்ளார்.
மேத்யூ தாமஸ்
மேத்யூ தாமஸ் கூறியிருப்பதாவது: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் படத்தில் நடிக்கிறேன். இதைவிட ஒரு சிறந்த அறிமுக தமிழ் படத்தை கேட்டிருக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.