லோகேஷின் அறிமுகம்
மாநகரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதால், ரசிகர்கள் மத்தியில் முதல் படத்திலேயே கவனம் பெற்றார் லோகேஷ் கனகராஜ். இப்படம் தற்போது பாலிவுட்டில் மும்பைகார் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது.
கைதியின் வெற்றி
மாநகரம் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய இரண்டாவது படம் கைதி. கார்த்தி ஹீரோவாக நடித்திருந்த இப்படம் பாடல்கள் மற்றும் ஹீரோயின் இன்றி உருவாக்கப்பட்டு இருந்தது. விஜய்யின் பிகில் படத்துக்கு போட்டியாக ரிலீசான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. இப்படமும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
மாஸ்டர் மூலம் ஹாட்ரிக் ஹிட்
கைதி படத்தை பார்த்து இம்ப்ரஸ் ஆன விஜய், தனது மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜுக்கு வழங்கினார். கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட லோகேஷ் கனகராஜ், கில்லி மாதிரி சொல்லி அடித்தார். மாஸ்டர் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதன்மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உயர்ந்தார் லோகேஷ்.
அடுத்தது விக்ரம்
வரிசையாக ஹாட்ரிக் ஹிட் கொடுத்த லோகேஷ் அடுத்ததாக கமலின் விக்ரம் படத்தை இயக்கி உள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.