
1977-ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் சூரி. இவரின் இயற்பெயர் ராமன். இவருடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் ஆறு பேர், அதில் சூரியும், லட்சுமணன் என்பவரும் இரட்டையர்கள். இவர்களுக்கு ராமன் லட்சுமணன் என பெற்றோர் பெயரிட்டிருந்த நிலையில், ரஜினியின் தீவிர ரசிகரான சூரி, தளபதி படத்திற்கு பின்னர் அப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரமான சூர்யா என்பதை தன் பெயராக மாற்றிக் கொண்டார். பின்னர் சினிமா ஆசையில் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறார் சூரி.
சினிமாவில் யாருக்கும் அவ்வளவு எளிதில் வாய்ப்புகள் கிடைத்துவிடாது. அதே நிலை தான் சூரிக்கும் இருந்தது. ஆரம்பத்தில் அவர் பட வாய்ப்பு தேடி ஒவ்வொரு அலுவலகமாக அழைந்தாராம். ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்ட சூரிக்கு வயிற்று பிழைப்புக்காக சினிமாவில் செட் அமைக்கும் பணிகளை செய்து வந்தார். அப்போது சில இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்ட சூரிக்கு லிங்குசாமி தான் தயாரிக்கும் படங்களில் வாய்ப்பு வழங்கி வந்தார். பின்னர் ஒருநாள் சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
அப்படத்தில் அவரை பேமஸ் ஆக்கியது பரோட்டா காமெடி தான், ஆனால் அந்த காட்சியில் முதலில் நடிக்க இருந்தது மற்றொரு நபர், ஆனால் சூரியின் மேனரிசம் சுசீந்திரனுக்கு பிடித்துப்போக அவர்தான் சூரியை அந்த காட்சியில் நடிக்க வைத்திருக்கிறார். அந்த ஒரு காட்சி சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் உண்மையில் சூரிக்கு பரோட்டா என்றாலே பிடிக்காதாம். அந்த காட்சிக்காக 10 பரோட்டா வரை சாப்பிட்டிருக்கிறார்.
வெண்ணிலா கபடி குழு படத்துக்கு பின்னர் பரோட்டா சூரி என்கிற அடையாளம் அவருக்கு கிடைத்தது. இதையடுத்து விஜய், அஜித். சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் காமெடியனாக வலம் வந்தார் சூரி. அந்த சமயத்தில் தான் வெற்றிமாறன் சூரியிடம் கதை சொல்ல சென்றிருக்கிறார். அப்போது அவர் சூரியை தன் படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்கப்போகிறேன் என சொன்னதும் சூரிக்கு உற்சாகம் தாங்கவில்லை.
இதையும் படியுங்கள்... விடுதலை 2 படத்தில் நடிக்க மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
ஆனால் வெற்றிமாறன் சூரிக்கு முதலில் சொன்ன கதை சில காரணங்களால் டிராப் ஆனது. பின்னர் விடுதலை படத்தின் கதையை சொல்லி சூரியை ஹீரோவாக்கி அழகுபார்த்தார் வெற்றிமாறன். விடுதலை படம் சூரிக்கு ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். அதுவரை காமெடியனாக பார்த்து வந்த சூரியை, மக்கள் ஹீரோவாகவும் ஏற்றுக்கொண்டனர். அந்த அளவுக்கு அப்படத்தில் அவர் திறம்பட நடித்திருந்தார். அப்படம் ஹிட் ஆனதை தொடர்ந்து சூரிக்கு ஹீரோவாக நடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.
அந்த வகையில் கூழாங்கல் படத்தின் இயக்குனர் வினோத் ராஜ் இயக்கிய கொட்டுக்காளி படத்தில் நடித்தார் சூரி. அப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்று குவித்த வண்ணம் உள்ளது. அதேபோல் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்த கருடன் திரைப்படம் அவரை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது. அப்படமும் பாக்ஸ் ஆபிஸீல் 50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. அடுத்ததாக விடுதலை 2 படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார் சூரி.
சினிமா மட்டுமின்றி பிசினஸிலும் கொடுகட்டிப் பறக்கும் நடிகர் சூரிக்கு, மதுரையில் அம்மன் உணவகம் என்கிற பெயரில் ஏராளமான ஓட்டல்கள் உள்ளன. அந்த பிசினஸை அவரது சகோதரர்கள் கவனித்து வருகின்றனர். அந்த உணவகத்தின் மூலம் கோடி கோடியாய் சம்பாதித்து வரும் சூரி, சினிமாவில் ஹீரோவான பின்னர் தன் சம்பளத்தை உயர்த்திவிட்டார். அவருக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
பிஎம்டபிள்யூ, இனோவா போன்ற சொகுசு கார்களையும் வைத்திருக்கும் நடிகர் சூரியின் சொத்து மதிப்பு மளமளவென உயர்ந்த வண்ணம் உள்ளது. அவருக்கு தற்போது ரூ.70 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அன்று சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர் இன்று இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியாகி இருப்பது சினிமா கனவோடு வரும் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இதையும் படியுங்கள்... சீனாவில் மகாராஜா செய்த பாக்ஸ் ஆபிஸ் சம்பவம்; ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் காலி!