என் பிள்ளைகளுக்கு ‘No Caste' சான்றிதழ் பெற முயற்சித்தேன்.. அதிகாரிகள் தர மறுத்துவிட்டனர் - வெற்றிமாறன் ஆதங்கம்

First Published Feb 5, 2023, 10:33 AM IST

ஜாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் எனவும் விருப்பப்படுவோருக்கு ‘No caste' சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என தொடர்ந்து வெற்றிப்படங்களை இயக்கிய அவர், தற்போது விடுதலை என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் பின்னணி பணிகள் தற்போது முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்வில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஜாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் எனவும் விருப்பப்படுவோருக்கு ‘No caste' சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் இயக்குனர் வெற்றிமாறன் பேசியது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது.

இதையும் படியுங்கள்... ஒரு பக்கம் உறவினர்... மறுபக்கம் நண்பர் - ஒரே நாளில் இரு மரணங்கள்... கலங்கிப்போன முதல்வர் மு.க.ஸ்டாலின்

அவர் பேசியதாவது : “பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஜாதிச் சான்றிதழ் கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும். எனது பிள்ளைகளுக்கு  ‘No caste' சான்றிதழ் பெற நான் முயற்சித்தேன். ஆனால் தர முடியாது என அதிகாரிகள் கூறிவிட்டனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடியபோதும், அவர்கள் நீங்கள் ஏதேனும் ஒரு ஜாதியை குறிப்பிட வேண்டும் என தெரிவித்தனர்.

ஜாதிச் சான்றிதழ் தேவையில்லை என விருப்பப்படுவோருக்கு ‘No caste' சான்றிதழ் வழங்க அனுமதிக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் சமூக நீதி அடிப்படையில் உரிமையை பெறுவதற்கு ஒருவர் ஜாதிச் சான்றிதழை பயன்படுத்துவது அவசியம்.

சினிமாவில் நடிக்கும் நடிகர்களை தலைவர் என்று சொல்வதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. அவர் நட்சத்திரங்கள் தான் தலைவர்கள் இல்லை. முந்தைய காலங்களில் நடிகர்கள் அரசியலுடன் தொடர்பில் இருந்ததால் அவர்களை தலைவர் என்று அழைத்தார்கள். அது பொருத்தமாக இருந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை” என வெற்றிமாறன் பேசி உள்ளார்.

இதையும் படியுங்கள்... நேற்று வாணி ஜெயராம்... இன்று டி.பி.கஜேந்திரன் - அடுத்தடுத்த மரணங்களால் திரையுலகினர் அதிர்ச்சி

click me!