பிரபல வில்லன் நடிகர் அசோகனின் திருமணம், ரன்னிங் - சேசிங் என திரில்லிங் அனுபவத்துடன் நடந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? இவரின் திருமண கதை குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
திருச்சியில் பிறந்து வளர்ந்த, நடிகர் அசோகனின் உண்மையான பெயர் ஆண்டனி. தன்னுடைய சிறிய வயதில் இருந்தே மேடைநாடகங்களில் நடித்து வந்த இவர், படிப்பில் மட்டும் அல்ல... பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி என எது வைத்தாலும் அதில் ஆர்வமுடன் பங்கேற்று பரிசையும் வென்று காட்டுவார். திருச்சியிலேயே தன்னுடைய பள்ளி படிப்பை முடித்த அசோகன், தன்னுடைய இளங்கலை பட்டபடிப்பையும், திருச்சியிலுள்ள புனித சூசையப்பர் கல்லூரியில் முடித்தார்.
27
Ashokan Cinema Carrier
படிப்பை முடித்த பின்னர், சில அரசு வேலைகளில் சேர அழைப்பு வந்த போதிலும், சினிமாவில் உள்ள ஆர்வத்தின் காரணமாக, இயக்குநர் டி. ஆர். ராமண்ணாவைச் சந்தித்து வாய்ப்பு கேட்டார். ஔவையார் படத்தின் மூலம் அசோகனை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய ராமண்ணா தான் இவருடைய ஆண்டனி என்கிற பெயரை சினிமாவுக்காக அசோகன் என மாற்றினார். ஔவையார் படத்தில் இவர் ஏற்று நடித்த ராஜ ராஜ சோழன் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
சிவாஜியுடன் எதிர்பாராதது, இல்லற ஜோதி, டாக்டர் சாவித்திரி, ரம்பையின் காதல், புதையல் என ஏராளமான படங்களில், தொடர்ந்து சிறிய வேடத்தில் நடித்து வந்த இவர், குறிப்பாக 1961 ஆம் ஆண்டில் வெளியான கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முன்னேறத் தொடங்கினார். இத்திரைப்படத்தில் ஆஷ் துரை வேடமேற்று நடித்திருந்தார். 1960 மற்றும் 1970 களில் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களிலேயே நடித்தார் அசோகன். ஏராளமான குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் இவரது குரலின் தொனியும், வசனங்களை இவர் உச்சரித்த பாணியும் இவரது தனித்துவமாக காட்டியது.
47
Family Against Marriage
நடிப்பில் வில்லன் என்றாலும், நிஜத்தில் திரைப்படத்தில் வரும் ஹீரோவை போல் ரன்னிங்... சேசிங் என இவருடைய திருமணம் நடந்துள்ளது. அதாவது அசோகன் கோவையைச் சேர்ந்த, பிராமண பெண்ணான சரஸ்வதி என்பவரை கல்லூரி காலங்களில் இருந்தே காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களின் காதலை அந்த பெண்ணின் பெற்றோர் ஏற்காமல், தொடர்ந்து எதிரிப்பு தெரிவித்து வந்தனர். இதற்கு காரணம் அசோகன் நன்கு படித்து, சினிமா துறையில் கை நிறைய சம்பளம் வாங்கும் நடிகராக இருந்த போதிலும் அவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பது தான்.
ஒரு கிறிஸ்தவருக்கு தங்களுடைய பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மாட்டோம் என்பது சரஸ்வதியின் பெற்றோர் உறுதியாக இருந்துள்ளனர். பல முறை அசோகன் பெண் கேட்டு சென்று அவர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வர, இதற்கு மேல் தங்களுடைய பெண்ணை சந்தித்து பேச முயற்சி செய்தால், காவல் நிலையத்தில் புகார் செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர்.
67
Ashokan
சரஸ்வதியோ, அசோகனை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நிலையில், தன்னுடைய காதலுக்காக பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு ஓடி வந்துள்ளார். ஒருபுறம் சரஸ்வதியை அவருடைய பெற்றோர் சல்லடை போட்டு தேடிக் கொண்டிருக்க, அசோகன் தன்னுடைய நண்பரான எம்ஜிஆருக்கு இது குறித்து ட்ரங் கால் செய்து தகவல் கொடுத்துள்ளார். தகவல் வந்த பின்னர் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாழ்த்து கூறிய எம்ஜிஆர், உடனடியாக சென்னையில் அசோகன் - சரஸ்வதி திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
அதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில், நண்பர்கள் புடை சூழ கதவுகள் மூடப்பட்டு அசோகனின் திருமணம் நடந்து முடிந்தது. மேலும் திருமணத்திற்காக சரஸ்வதியின் பெயர் மேரி ஞானம் என மாற்றப்பட்டது. சரஸ்வதியின் சம்மதத்தின் பெயரில் அவருடைய திருமணம் கிறிஸ்தவ திருமணமாக நடந்ததாம். அசோகன் மற்றும் மேரி ஞானம் தம்பதிக்கு 2 மகன்கள் பிறந்தனர். அதில் ஒருவர் தான் தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து வரும் வின்சென்ட் அசோகன். தன்னுடைய தந்தை போலவே வில்லன் கதாபாத்திரங்களை தேர்வு செய்து இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.