
நடிகர் வடிவேலு 1960ம் ஆண்டு அக்டோபர் 10ந் தேதி மதுரையில் பிறந்தார். இவரது தந்தை நடராசன், அந்த காலத்தில் கண்ணாடிகளை வெட்டுவதில் கில்லாடியாக இருந்ததால், இவரின் திறமையை பார்த்து வியந்து போன வெள்ளைக்காரர்கள் கொடைக்கானலில் உள்ள பங்களாவில் வேலை கொடுத்தனர். வடிவேலுவுக்கு உடன் பிறந்தவர்கள் 7 பேர். இதில் வடிவேலு மட்டும் கறுப்பாக இருப்பார் மற்ற ஆறு பேரும் மாநிறத்தில் இருந்தனர்.
இவர் ஆரம்ப பள்ளியில் படித்தபோது இவரை ‘ஏ கருவா பயலே’ என அழைத்து கேலி செய்வார்களாம். இதன்காரணமாகவே இவரது பள்ளிப்படிப்பு ஆரம்ப பள்ளியோடு முடிந்தது. அதன்பின்னர் பள்ளிக்கூடம் பக்கமே தலைவைத்து படுக்காத வடிவேலு, கிராமங்களில் நடக்கும் நாடகங்களில் நடித்து வந்தார். ஒருமுறை தீபாவளியின் போது நெஞ்சு வலிப்பதாக மயங்கி விழுந்த தந்தையை மருத்துவமனையில் சேர்த்தபோது, ஆபரேஷன் செய்ய ஒரு லட்சம் செலவாகும் என சொல்லி இருக்கிறார்கள்.
அப்போது எப்படி பணத்தை ரெடி பண்ண போகிறோம் என கதறி அழுதுகொண்டிருந்த வடிவேலுவின் கண்முன்னே அவரது தந்தையின் உயிரும் பிரிந்தது. பின்னர் வறுமையால் வாடிய தன் குடும்பத்தை காப்பாற்ற, காண்ணாடி கடையில் கண்ணாடிகளுக்கு பிரேம் போடும் வேலையில் சேர்ந்தார் வடிவேலு. அந்த சமயத்தில் மதுரைக்கு திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள வந்த ராஜ்கிரணை நேரில் சந்தித்த வடிவேலு, சினிமாவில் வாய்ப்பு கேட்டிருக்கிறார்.
அப்போது சில காமெடி சீன்களை நடித்துக் காட்டி இருக்கிறார். சரி சென்னைக்கு வந்து பாரு என சொல்லிவிட்டு சென்றாராம் ராஜ்கிரண். சென்னைக்கு போக காசு இல்லாததால் வீட்டில் இருந்த இரண்டு சட்டிகளை 100 ரூபாய்க்கு அடமானம் வைத்துக்கொண்டு அந்த பணத்துடன் சென்னைக்கு கிளம்பி இருக்கிறார் வடிவேலு. அப்போ லாரி ஒன்றில் ஏறி செல்ல முடிவெடுத்த அவரிடம் டிரைவர் பக்கத்துல உட்கார்ந்து போக 25 ரூபா, மேலே படுத்துட்டு போனா 15 ரூபா என சொன்னதும், 10 ரூபா மிச்சம் செய்ய ஆசைப்பட்டு மேலே படுத்துக்கொண்டு சென்றிருக்கிறார் வடிவேலு.
அப்போது இரவு குளிர் வாட்டிவதைக்க, சிறிது நேரம் கண் அசந்து தூங்கியபோது அவர் சட்டை பாக்கெட்டில் இருந்த பணம் அனைத்தும் காற்றில் பறந்திருக்கிறது. இடையே சாப்பாட்டிற்காக லாரி நின்றபோது இறங்கிய வடிவேலு, கையில் ஒரு ரூபா கூட இல்லாமல் கடைக்கு சென்ற வடிவேலு டிரைவரிடம் நடந்ததை கூறி இருக்கிறார். அப்போது அந்த டிரைவர் வடிவேலுவை ஓட்டலுக்கு அழைத்து சென்று பரோட்டா வாங்கி கொடுத்தது மட்டுமின்றி தாம்பரத்தில் இறக்கி விடும்போது செலவுக்காக 5 ரூபாயும் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.
பின்னர் அங்கிருந்து ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு சென்ற வடிவேலு, அங்கிருந்த வாட்ச்மேனிடம் தான் வாய்ப்பு தேடி வந்துள்ள விஷயத்தை சொல்லி இருக்கிறார். பின்னர் அவர் நடித்துகாட்ட சொன்னதும், அவரது நடிப்பை பார்த்து வாட்ச்மேன் பாராட்டி உள்ளே அனுப்பி இருக்கிறார். பின்னர் சினிமாவில் எவ்வளவு தேடியும் வாய்ப்பு கிடைக்காததால் நடிகர் ராஜ்கிரணின் ஆபிஸில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்... நடிகை ராதிகாவின் தந்தைக்கு 5 மனைவிகளா! 6 வது திருமணத்துக்கு பெண் கடத்திய பகீர் சம்பவம்
டீ வாங்கி வருவது, அலுவலகத்தை கூட்டி பெருக்கி சுத்தம் செய்வது என அனைத்தும் அவருக்கு அத்துப்படியாக இருந்தது. அப்போது என் ராசாவின் மனசிலே படத்தில் இடம்பெறும் போடா போடா புண்ணாக்கு என்கிற பாடல் படமாக்கப்பட்டபோது அதில் நடிக்க வேண்டியவர் வராததால், அவருக்கு பதில் வடிவேலுவை நடிக்க வைத்திருக்கிறார் ராஜ்கிரண். பின்னர் படம் ரிலீஸ் ஆனதும் இயக்குனர் ஆர்.வி உதயகுமார், உங்கிட்ட ஏதோ இருக்குடா என்று சொல்லி தன்னுடைய சின்ன கவுண்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்துள்ளார்.
அப்படத்தில் விஜயகாந்துக்கு குடை பிடிக்கும் பன்னையாள் வேஷம் கொடுத்ததோடு, வடிவேலுவை கமல், பிரபு, கார்த்திக் போன்ற நடிகர்களிடமும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். தேவர்மகன் படத்தில் வடிவேலுவின் நடிப்பை பார்த்த சிவாஜி கணேசன், இவர் காமெடியன் மட்டுமில்ல நல்ல கேரக்டர் ஆர்டிஸ்ட் என கமலிடம் சொல்லி இருக்கிறார்.
பின்னர் படிப்படியாக காமெடி வேடங்களில் நடித்து கோலோச்சிய வடிவேலுவின் கெரியரில் மறக்க முடியாத படம் என்றால் அது வின்னர் தான். இப்படத்தில் கட்டதுறையாக வரும் ரியாஸ் கானிடம், ‘வேணாம் வலிக்குது அழுதுருவேன்’ என்கிற வசனத்தை பேசி இருப்பார் வடிவேலு. இந்த காட்சியை மட்டும் 16 டேக் எடுத்தார்களாம். ஏனெனில் இதில் வடிவேலு அந்த வசனம் பேசியதை கேட்டு ரியாஸ் கான் விழுந்து விழுந்து சிரித்ததால் அத்தனை டேக் எடுத்தாராம் சுந்தர் சி.
வடிவேலு பேசிய வசனங்கள் படங்களின் டைட்டிலாகவும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் மீம் கிரியேட்டர்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாகவும் இருந்து வருகிறது. நீங்கள் பேசிய வசனங்கள் உங்களின் சொந்த வசனங்கள், அதற்கு ராயல்டி கேட்டால் என்ன என பேட்டி ஒன்றில் கேட்டபோது, அட போயா இதுக்கெல்லாமா காசு கேப்பாங்க, என்னால நாளு பேர் சந்தோஷமா இருந்துட்டு போட்டுமே என பெரிய மனசுடன் சொல்லி இருக்கிறார் வடிவேலு.
இதையும் படியுங்கள்... 34 படத்தில் ஹீரோயின்; பிரபலம் கொடுத்த அழுத்தம்.. வேறு வழி இல்லாமல் ஐட்டம் டான்சராக மாறிய அனுராதா!