தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி, கடந்த 2008-ம் ஆண்டு ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன்மூலம் படங்களை தயாரிக்க தொடங்கினார். அந்த வகையில் அவர் தயாரித்த முதல் படம் குருவி. இதையடுத்து கமலின் மன்மதன் அம்பு, சூர்யா நடித்த ஆதவன் மற்றும் ஏழாம் அறிவு என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வந்தார் உதயநிதி.
இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் வெற்றியடைந்த பின் நடிப்பில் கவனம் செலுத்திய உதயநிதி, படங்கள் தயாரிப்பதை குறைத்துக் கொண்டார். பின்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.
கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின், மீண்டும் சினிமாவில் விநியோகஸ்தராக பிசியானார் உதயநிதி. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை மாதம் தவறாமல் இவர் விநியோகம் செய்யும் படங்கள் ரிலீசாகி வருகின்றன. ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், கமலின் விக்ரம், சிம்புவின் வெந்து தணிந்தது காடு, தனுஷின் நானே வருவேன், சிவகார்த்திகேயனின் டான், விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் என இந்த ஓராண்டு இடைவெளியில் ரிலீசான முன்னணி நடிகர்களின் படங்கள் பெரும்பாலானவற்றை இவர் தான் விநியோகம் செய்திருந்தார்.
இதையும் படியுங்கள்... 50 வயதில் வாரிசு நடிகருடன் காதல்... திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானாரா மணிரத்னம் பட நடிகை?
இவர் விநியோகம் செய்த படங்களில் ஒரு சில தோல்வியை தழுவி இருந்தாலும், பெரும்பாலானவை வெற்றிப்படங்களாகவே இருந்தன. இதனால் கடந்த ஓராண்டில் இவர் வெளியிட்ட படங்கள் மொத்தமாக ரூ.1200 கோடிக்கு மேல் லாபம் பார்த்துள்ளன. லாபத்தில் இருந்து 10 சதவீத தொகையை தங்களுக்கு தர வேண்டும் என்கிற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் ரெட் ஜெயண்ட் நிறுவனம் படங்களை விநியோகம் செய்கின்றன.