லவ் டுடே படம் பார்த்து போனை மாத்திக்கலாமானு கேட்ட துர்கா ஸ்டாலின்! பதிலுக்கு முதல்வர் கொடுத்த அல்டிமேட் ரிப்ளை

First Published | Nov 13, 2022, 5:23 PM IST

லவ் டுடே படம் பார்த்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன சொன்னார் என்பது குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீசான படம் லவ் டுடே. கோமாளி படத்தின் வெற்றிக்கு பின் அவர் இயக்கிய இரண்டாவது படம் இதுவாகும். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு, ரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இயக்குனர் பிரதீப் தான் இப்படத்தில் நாயகனாகவும் நடித்து இருந்தார். அவர் ஹீரோவாக நடித்த முதல் படம் இதுவாக இருந்தாலும், இப்படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்த லவ் டுடே படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது.

இதையும் படியுங்கள்... ‘லவ் டுடே’ படக்காட்சியை விழிப்புணர்வுக்காக பயன்படுத்திய போலீஸ்... நெகிழ்ந்துபோன இயக்குனர் பிரதீப்


வெளியானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. இரண்டாவது வாரத்திலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வரும் இப்படம் வெளியான 9 நாட்களில் 35 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படத்திற்கு பிரபலங்களும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட நடிகர் ரஜினிகாந்த் படத்தை பார்த்து இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டினார்.

இந்நிலையில், லவ் டுடே படம் பார்த்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன சொன்னார் என்பது குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி உள்ளார். அதன்படி “லவ் டுடே படத்தை அப்பா, அம்மா உடன் சேர்ந்து பார்த்தேன். படம் முடித்து வெளியே வந்ததும் படம் நல்லா இருக்கு உதயானு அப்பா சொன்னார். இதைவிட செம்ம காமெடி என் அம்மா சொன்னது தான். படம் சூப்பரா இருக்கே, இதே மாதிரி நம்மளும் போனை மாத்திக்கலாமானு கேட்டாங்க. நானும், அப்பாவும் அய்யய்யோ வேணவே வேணாம்னு சொன்னோம்” என சிரித்தபடி கூறினார் உதயநிதி.

இதையும் படியுங்கள்... திருமணத்திற்காக நயன்தாரா செஞ்ச விஷயத்தை அப்படியே காப்பி அடிக்கும் ஹன்சிகா... என்ன பண்ணபோகிறார் தெரியுமா?

Latest Videos

click me!