அதிபர் டிரம்ப், வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவீத வரி விதித்துள்ளதால், அது இந்திய படங்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை பார்க்கலாம்.
அமெரிக்க உற்பத்தித் துறையை வலுப்படுத்த பரஸ்பர வரிகளை விதித்த பிறகு, தற்போது திரைப்படத்துறைக்கு தனது கவனத்தைத் திருப்பியுள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப். வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100% வரி விதிக்கும் நடவடிக்கையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று வர்த்தகத் துறை மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க திரைப்படத்துறை வேகமாக அழிந்து வருவதாக டிரம்ப் கருதுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
25
ஹாலிவுட் படங்களுக்கும் சிக்கல்
அமெரிக்க ஸ்டுடியோக்களால் தயாரிக்கப்படும் படங்கள் பெரும்பாலும் இங்கிலாந்து மற்றும் கனடாவில் படமாக்கப்படுகின்றன. தற்போது மார்வெலின் "அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே," கிறிஸ்டோபர் நோலனின் "தி ஒடிஸி," "அவதார் 4," மற்றும் "சூப்பர்கேர்ள்" உள்ளிட்ட புகழ்பெற்ற ஹாலிவுட் படங்கள் வெளிநாடுகளில் தான் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படி பெரும்பாலான பெரிய பட்ஜெட் படங்கள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு அதிக வருவாயை ஈட்டுவதால், அது ஹாலிவுட் ஸ்டுடியோக்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு டிரம்ப் இத்தகைய அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.
35
100 சதவீத வரியால் இந்திய படங்களுக்கு என்ன பாதிப்பு?
அமெரிக்காவில் இந்திய திரைப்படங்களை திரையிட வேண்டும் என்றால் இனி தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அதிக செலவிட வேண்டும். இந்த 100 சதவீத வரியால் இனி அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் இந்திய படங்களுக்கான லாபம் குறையவும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்தியர்களிடையே பெருவாரியான இந்திய திரைப்படங்கள் சென்றடைவதை கட்டுப்படுத்த இந்த வரிவிதிப்பு வழிவகை செய்யும்.
தென்னிந்திய சினிமா, குறிப்பாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்கள் சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டி வருகின்றன. RRR, புஷ்பா 2, ஜெயிலர், லியோ, கேஜிஎஃப் 2 போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் இந்தியாவை போல் அமெரிக்காவிலும் சக்கைப்போடு போட்டன. தற்போது 100 சதவீத வரி விதிப்பால் அப்படத்தை அமெரிக்காவில் வெளியிடுவதை கருத்தில் கொண்டு அதற்கான பட்ஜெட்டும் அதிகரிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.
55
டிக்கெட் விலையும் அதிகரிக்க வாய்ப்பு
100 சதவீத வரிவிதிப்பால், அமெரிக்காவில் இனி வழக்கத்தை கூடுதல் தொகை கொடுத்து தான் இந்திய படங்களை வாங்கி வெளியிட முடியும். இதனால் அங்கு வெளியிடப்படும் இந்திய படங்களுக்கான டிக்கெட் விலையும் இனி அதிகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது அங்கு உள்ள இந்தியர்களுக்கும் பெரும் சுமையாக அமையக்கூடும். இந்த வரிவிதிப்புக்கு எதிராக தற்போது சோசியல் மீடியாவில் கண்டனக் குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன.