
தமிழ் சினிமாவுக்கு 2024-ம் ஆண்டு மந்தமான ஆண்டாகவே சென்றிருக்கிறது. ஏனெனில் கடந்த ஆண்டு ஜெயிலர், லியோ என இரண்டு தமிழ் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டிய நிலையில், இந்த ஆண்டு ஒரு தமிழ் படம் கூட 500 கோடி வசூலை தாண்டவில்லை. வழக்கம்போல் இந்த வருடமும் தமிழ் சினிமாவின் 1000 கோடி வசூல் கனவு எட்டாக்கனியாகவே உள்ளது. இந்த நிலையில், இந்த வருடம் ரிலீஸ் ஆகி அதிக வசூல் அள்ளிய டாப் 5 படங்களை பார்க்கலாம்.
1. கோட்
தமிழ் சினிமாவில் 2024-ம் ஆண்டு அதிக வசூல் ஈட்டிய படம் தி கோட். தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு வந்த இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சினேகா, மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் திரைக்கு வந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.450 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது.
2. அமரன்
விஜய்க்கு அடுத்தபடியாக ரஜினி, கமல் படங்கள் தான் இருக்கும் என்கிற இமேஜை உடைத்து தற்போது பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக சிவகார்த்திகேயனை மாற்றியிருக்கிறது அமரன் திரைப்படம். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வந்து ரூ.350 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதையும் படியுங்கள்... எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பரத்தில் நடிக்க மறுக்கும் ரஜினிகாந்த்; காரணம் என்ன?
3. வேட்டையன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு லால் சலாம் மற்றும் வேட்டையன் ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் லால் சலாம் படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், வேட்டையன் படம் அவருக்கு ஆறுதல் வெற்றியை கொடுத்தது. இப்படம் கடந்த அக்டோபர் மாதம் ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீஸ் ஆனது. லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்கி இருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.280 கோடி வசூலித்து மூன்றாம் இடத்தில் உள்ளது.
4. ராயன்
2024-ம் ஆண்டு நடிகர் தனுஷின் பிறந்தநாளை ஒட்டி ரிலீஸ் ஆன திரைப்படம் ராயன். இப்படத்தில் ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி அதை இயக்கியும் இருந்தார் தனுஷ். அவரின் 50வது படமான இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். இப்படம் ஜூலை மாதம் திரைக்கு வந்து மாபெரும் வெற்றியை ருசித்து பாக்ஸ் ஆபிஸில் ரூ.160 கோடி வசூலையும் வாரிக்குவித்து 4ம் இடத்தில் உள்ளது.
5. மகாராஜா
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான மகாராஜா கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்தது. இப்படத்தை நித்திலன் இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் அனுராக் கஷ்யப், பிக் பாஸ் சாச்சனா, நட்டி நட்ராஜ், அபிராமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் ரிலீஸ் ஆன போது ரூ.110 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், தற்போது சீனாவில் 40000 திரைகளில் ரிலீஸ் ஆகி அங்கும் வசூல் வேட்டையாடி வருகிறது. தற்போது வரை இப்படம் ஒட்டுமொத்தமாக ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து 5ம் இடத்தில் உள்ளது.
இதையும் படியுங்கள்... பாலிவுட்டை மிஞ்சும் தென்னிந்திய படங்கள்! 2025 இல் செம ட்ரீட் இருக்கு!