உள்ளம் உருகுதய்யா... தமிழ் திரையுலகில் இசை ராஜாங்கம் நடத்திய டி.எம்.செளந்தரராஜனின் 100-வது பிறந்தநாள் இன்று

First Published Mar 24, 2023, 1:00 PM IST

காலத்தால் அழிக்கமுடியாத பல இன்னிசை பாடல்களைக் கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள டி.எம்.செளந்தரராஜனின் 100-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

மதுரையில் கடந்த 1922-ம் ஆண்டு மார்ச் 24ந் தேதி பிறந்தவர் டி.எம் செளந்தரராஜன். அவர் தந்தை மீனாட்சி ஐயங்கார் கோவிலில் பாடும் பஜனை பாடல்களை கேட்டு வளர்ந்த செளந்தரராஜனுக்கு சிறுவயதிலேயே சங்கீதத்தின் மீது காதல் வந்துவிட்டது. ஸ்ருதி சுத்தமாக செளந்தரராஜன் பாடியதை கேட்டு விழாக்காலங்களில் பஜனை பாட அவருக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். பள்ளிப்படிப்போடு நிறுத்திக்கொண்ட செளந்தரராஜன், சமூக பெரியவர்கள் உதவி உடன் கர்நாடக சங்கீதம் பயின்றுள்ளார். 

காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் ஓராண்டு கர்நாடக சங்கீதம் பயின்றதன் காரணமாக அரங்கேற்றத்துக்கு தயாரானார் டி.எம்.எஸ். அதற்கு முன்னரே இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் பிறந்துவிட்டன. இதையடுத்து கர்நாடக சங்கீத கச்சேரிகள் மூலம் வருவாய் ஈட்டி வந்துள்ளார் செளந்தரராஜன். சினிமாவில் பாடினால் நல்ல வருவாய் கிடைக்கும் என்ற எண்ணத்தில் கோவை ராயல் டாக்கீஸில் பணியில் சேர்ந்தார்.

1950-ல் வெளிவந்த கிருஷ்ண விஜயம் படத்தில் ராதா நீ என்னைவிட்டு போகாதடி என்கிற பாடல் மூலம் தன் திரை வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் சின்னச் சின்ன வாய்ப்புகள் வந்தாலும், அதன்மூலம் பெரியளவில் சோபிக்க முடியாததால் சென்னைக்கு சென்ற  டி.எம்.எஸ், ஏவிஎம்மின் தயாரிப்பில் உருவான செல்லப்பிள்ளை படத்தில் பாடும் வாய்ப்பை பெற்றார். ஆனால் அந்த படம் வெளியாகும் முன்பே தூக்கு தூக்கி, மலைக்கள்ளன் போன்ற படங்கள் வெளியாகி முன்னணி பாடகர் ஆனார் டி.எம்.எஸ்.

1950-களில் பல்வேறு இசையமைப்பாளர்களிடம் இவர் பாடினாலும், இசை மாமேதை ராமநாதன் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் தான், டி.எம்.எஸ். ஒரு பன்முகத்திறன் கொண்ட பாடகராக நிலைக்க உதவின. குறிப்பாக அம்பிகாபதி, வணங்காமுடி, சாரங்கதரா போன்ற படங்களுக்காக டி.எம்.செளந்தரராஜன் பாடிய பாடல்கள் இன்று ரசிகர்கள் மனதில் ரிங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.

இதையும் படியுங்கள்... தந்தை மீது அதீத பாசம் கொண்டிருந்த அஜித்... அவருடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள் இதோ

1960-கள் டி.எம்.எஸ். அவர்களின் பொற்காலம் என்றே கூற வேண்டும். எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்பட அனைத்து முன்னணி நட்சத்திரங்களுக்கும் பாடல்கள் பாடியிருந்தார். மெல்லிசை மன்னர்களின் பாடல்களுக்கு உயிரூட்டி இருந்தார் டி.எம்.எஸ். குறிப்பாக எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இருவருக்கும் டி.எம்.எஸ். பாடிய பாடல்கள் சாகா வரம் பெற்றவை என்றே கூற வேண்டும். 

சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த புதியபறவை படத்தில் இடம்பெற்ற எங்கே நிம்மதி என்கிற பாடலுக்கு டி.எம்.எஸ். குரல் வழி உயிர்கொடுத்திருந்தார் என்றே கூறலாம். அதேபோல் உயர்ந்த மனிதன் படத்தின் ஒரு பாடலில் நாயகன் ஓடிக்கொண்டே பாடும் பாடியான பாடல், பின்னணியிலும் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக இசைக் கூடத்தில் ஓடிக்கொண்டே மூச்சிறைக்க அந்த பாடலை பாடி கொடுத்து தான் செய்யும் தொழில் மீது கொண்டிருந்த பக்தியை இதன்மூலம் வெளிப்படுத்தி இருந்தார் டி.எம்.எஸ்.

இதுதவிர திருவிளையாடல் படத்தில் இடம்பெறும் பாட்டும் நானே பாவமும் நானே பாடல் டி.எம்.எஸ். அவர்களின் திறமைக்கு ஒரு சான்று. சிவாஜி தொடங்கி ரஜினி, கமல் போன்ற நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றிய டி.எம்.எஸ், திரை இசையில் கோலோச்சிய காலத்தில் பட்டினத்தார், அருணகிரிநாதர், கல்லும் கனியாகும் போன்ற திரைப்படங்களில் நடிக்கவும் செய்தார்.

திரை இசையை போல் பக்தி இசையிலும் ராஜாங்கம் நடத்தினார் டி.எம்.எஸ். முருகன் மீது கொண்ட பக்தியினால் இவர் பாடிய பக்திப் பாடல்கள் இன்றும் பல இல்லங்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. தமிழக அரசின் கலைமாமணி மற்றும் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது போன்ற பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற டி.எம்.எஸ். உடல்நலக்கோளாறு காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு மே 25-ந் தேதி சென்னையில் காலமானார். அவர் மறைந்தாலும், அவர் பாடிய பாடல்கள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருவதே அவரின் ஆளுமையை காட்டுகிறது.

இதையும் படியுங்கள்... தந்தைக்கு என்ன ஆச்சு... திடீரென மரணமடைந்தது எப்படி? நடிகர் அஜித் வெளியிட்ட உருக்கமான அறிக்கை

click me!