சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் வாணி போஜன். இவர் நடித்த தெய்வமகள் சீரியல் வேறலெவல் வரவேற்பை பெற்றதால், ரசிகர்களை இவரை செல்லமாக சின்னத்திரை நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர். தற்போது நடிகை வாணி போஜன் சினிமாவில் பிசியாகிவிட்டார்.
சினிமாவில் முதலில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த வாணி போஜன், கடந்த 2020-ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் மூலம் தான் பேமஸ் ஆனார். இந்த படத்தில் மீரா என்கிற கதாபாத்திரத்தில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார் வாணி போஜன். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து வாணி போஜனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின.
இவர் கைவசம் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு, தாழ்திறவா, லவ், ஊர்க்குருவி, ரேக்ளா, ஆர்யன் உள்பட ஏராளமான படங்கள் உள்ள நிலையில், தற்போது இவர் நடித்துள்ள செங்களம் என்கிற வெப் தொடரும் ரிலீஸ் ஆகி உள்ளது. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள இந்த வெப் தொடர் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.
இந்த வெப் தொடரின் புரமோஷனுக்காக நடிகை வாணி போஜன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது சேலையை சரி செய்தால் கூட, அதை ஜூம் பண்ணி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அதற்கு ஆபாசமாக கமெண்ட் செய்யும் விஷமிகளும் இங்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.