
மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தக் லைஃப்’. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் உருவானது. கடந்த ஜூன் 5ஆம் தேதி பிற மொழிகளில் வெளியான கன்னட மொழி சர்ச்சை காரணமாக கர்நாடகாவில் மட்டும் வெளியிடப்படவில்லை. மற்ற நான்கு மொழிகளில் வெளியான நிலையில், முதல் நாளிலிருந்து படம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் சிறப்பாக இருந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் ‘தக் லைஃப்’ படக்குழுவினர் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். படம் வெளியாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பில் இருந்தே படக்குழுவினர் பல மாநிலங்களுக்கு சென்று படத்திற்கான புரமோஷன் பணிகளை மேற்கொண்டு வந்தனர். தமிழகத்திலும் தொடர்ந்து புரமோஷன் நிகழ்ச்சிகள், பத்திரிக்கையாளர் சந்திப்பு, பேட்டிகள் என விளம்பர பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
படத்தின் பாடல்கள் ஹிட் அடித்தது, கன்னட மொழி சர்ச்சை, கேரள ரசிகர்களுக்காக ஜோஜூ ஜார்ஜை படத்தில் இணைத்தது, இளைஞர்களை கவர சிலம்பரசனை படத்தில் இணைத்தது, ஜிங்குச்சா பாடல் ஹிட் அடித்தது என சமூக வலைதளங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இருப்பினும் படம் இறுதியில் படுதோல்வியை சந்தித்துள்ளது. 38 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் என்றதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மேலும் டிரெய்லர், டீசர் ஆகியவற்றை வைத்து படம் உலக தரத்தில் இருக்கும் என ரசிகர்கள் தங்கள் பங்கிற்கு சமூக வலைதளங்களில் பதிவுகளை போட்டு எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தனர்.
ஆனால் படம் வெளியானதும் தங்கள் மனதில் கற்பனை செய்த அளவிற்கு இல்லாமல், மிகவும் மோசமான திரைக்கதை இருந்ததை பார்த்ததும் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. மேலும் சமூக வலைதளங்களில் ‘தக் லைஃப்’ திரைப்படம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இதுவே படத்தின் வசூல் குறைய காரணமாக பார்க்கப்படுகிறது. பெரிதாக எந்த விளம்பரமும் செய்யாத சிறிய பட்ஜெட்டில் முதலீடு செய்து எடுக்கப்படும் படங்கள் கூட மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் காலத்தில், அதிக பட்ஜெட், மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளம், கோடிகளில் முதலீடு செய்தும் திரைக்கதை நன்றாக இல்லாததால் படத்தின் வசூல் பலத்த அடி வாங்கி உள்ளது.
பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளியிடும் இணையதளங்களின் அடிப்படையில் ‘தக் லைஃப்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.15.5 கோடியையும், இரண்டாவது நாளில் ரூ.7.15 கோடியையும், மூன்றாவது நாளில் ரூ.7.75 கோடியையும், நான்காவது நாளில் ரூ.6.5 கோடியையும், ஐந்தாவது நாளில் ரூ.3.25 கோடியையும் வசூலித்துள்ளது. இந்திய அளவில் சுமார் ரூ.40 கோடி மட்டுமே வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இது ‘இந்தியன் 2’ வசூலை விட மிகவும் குறைவாகும். முதல் நாளே வசூல் நிலவரங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் ‘தக் லைஃப்’ படக்குழுவினர் அமைதி காத்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் இனி நட்சத்திர அந்தஸ்து, இயக்குனர் அந்தஸ்து, நடிகர்கள் பட்டாளம், மிகப்பெரிய பட்ஜெட் ஆகியவை எடுப்படாது என்பது தெளிவாகத் தெரிகிறது. படத்தின் திரைக்கதை நன்றாக இருந்தால் மட்டுமே ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள் என்பதை இனியாவது இயக்குனர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.