பண்டிகை தினம் என்றாலே அன்று புதுப்படங்களுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கும் ஏராளமான புதுப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த ஆண்டு பெரிய படங்கள் எதுவும் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் ஆகவில்லை. அன்று ரிலீஸ் ஆகும் படங்கள் அனைத்துமே சிறு பட்ஜெட் படங்கள் தான். இதனால் ஆகஸ்ட் 14ந் தேதி ரிலீஸ் ஆன கூலி படம் மேலும் ஒரு வாரம் தாக்குப்பிடிக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில் அடுத்த மாதம் 5ம் தேதி தான் சிவகார்த்திகேயனின் மதராஸி படம் ரிலீஸ் ஆகிறது. அதுவரை கூலியின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
24
விநாயகர் சதுர்த்தி ரிலீஸில் இருந்து விலகிய படங்கள்
இந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்த ரிவால்வர் ரீட்டா திரைப்படமும், ஜிவி பிரகாஷ் குமாரின் அடங்காதே மற்றும் அதர்வாவின் தணல் ஆகிய படங்கள் தான் ரிலீஸ் ஆகும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தன. ஆனால் தற்போது இந்த மூன்று படங்களுமே ரிலீஸில் இருந்து திடீரென விலகி இருக்கிறது. ரிலீசுக்கு இன்னும் ஒரு நாள் இருக்கும் நிலையில், இதுவரை எந்தவித புரமோஷனையும் தொடங்காததால், இந்த மூன்று படங்களுமே நாளை திரைக்கு வராது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. அதற்கு பதிலாக 8 சிறு பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகிறது. அது என்னென்ன என்பதை பார்க்கலாம்.
34
விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் ஆகும் படங்கள் லிஸ்ட்
அதன்படி விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 27-ந் தேதி கடுக்கா என்கிற படம் மட்டும் ரிலீஸ் ஆக உள்ளது. மற்ற படங்கள் எல்லாம் ஆகஸ்ட் 29-ந் தேதி திரைக்கு வருகிறது. அதன்படி கிப்ட், அசுர மனிதன், நறுவீ, குற்றம் புதிது, சொட்ட சொட்ட நனையுது, பேய்கதை, வீர வணக்கம் ஆகிய படங்கள் வருகிற வெள்ளிக்கிழமை முதல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகின்றன. இதில் பெரும்பாலான படங்கள் புது முகங்கள் நடித்துள்ளது. இந்தப் படங்களுக்கு போதுமான புரமோஷனும் செய்யப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ரிலீஸ் தமிழ் சினிமாவில் ஆரவாரம் இன்றி காணப்படுகிறது.
விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் ஆகும் படங்களை சேர்த்து மொத்தமாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 170க்கும் மேல் உள்ளது. இதில் ஹிட்டான படங்கள் என எடுத்துப் பார்த்தால் 20 தான் இருக்கும். மற்றவை எல்லாம் பிளாப் பட்டியலில் தான் இணைந்திருக்கின்றன. அடுத்து எஞ்சியுள்ள நான்கு மாதங்களில் சுமார் 75 படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அவற்றில் எத்தனை வெற்றிப்படங்கள் வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதுமட்டுமின்றி இனி தொடர்ந்து பண்டிகை நாட்கள் வருவதால் புதுப் படங்களும் ஏராளமாக ரிலீஸ் ஆக உள்ளன.