நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களை அழைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாம்.
தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு செல்வதாக அறிவித்துள்ளார். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியையும் தொடங்கி, அக்கட்சியின் இரண்டு மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் விஜய். தவெக-வின் முதல் மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியிலும், அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த ஆகஸ்ட் 21-ந் தேதி மதுரையிலும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தவெக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
24
விஜய்யின் கடைசி படம்
தவெக மாநாட்டை போல் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் பாபி தியோல், கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படம் தான் நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதால் அதைக் கொண்டாடித் தீர்க்க ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். ஜனநாயகன் திரைப்படம் அரசியல் கதையம்சத்துடன் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது.
34
பொங்கல் ரிலீஸ்
ஜனநாயகன் திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர உள்ளதாக ஏற்கனவே அறிவித்துவிட்டனர். அப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. விஜய்யின் மாநாட்டை போல் அவரின் ஜனநாயகன் பட ஆடியோ லாஞ்சுக்காகவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அந்த பிரம்மாண்ட விழா வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நடைபெற உள்ளது. அதுவும் சென்னையில் அல்ல, அந்த விழாவை மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஜனநாயகன் திரைப்படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், அப்படத்தின் ஆடியோ லாஞ்சை விஜய்யின் ஃபேர்வெல் விழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்களாம். மேலும் இதில் கலந்துகொள்ள முன்னணி திரையுலக நட்சத்திரங்களான ரஜினி, கமல், சூர்யா, அஜித் ஆகியோரையும் அழைக்க திட்டமிட்டுள்ளார்களாம். நிச்சயமாக ரஜினி, கமல் இதில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை. அதேபோல் தன் பட விழாக்களிலேயே கலந்துகொள்ளாத அஜித், இதில் கலந்துகொள்வதும் டவுட்டு தான். சூர்யா, சிம்பு போன்ற நட்சத்திரங்கள் வேண்டுமானால் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர்கள் எதிர்பார்த்தபடி மேற்கண்ட பிரபலங்கள் எல்லாம் கலந்துகொண்டார்கள் என்றால், தமிழ் சினிமாவின் உச்ச நிகழ்வாக ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.