மாநகரம், கைதி என வித்தியாசமான கதைக்களங்கள் மூலமாக தொடர் வெற்றிகளைக் குவித்த இயக்குநர் லோகேஷ் கனராஜின் மூன்றாவது திரைப்படம் ‘மாஸ்டர்’. தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கெளரி கிஷன், விஜே ரம்யா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், சேத்தன், சஞ்சீவ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
கடந்த ஏப்ரல் மாதமே மாஸ்டர் படம் வெளியாக தயாராக இருந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் வெளியீடு தடைபட்டது. இதையடுத்து கடந்த 13ம் தேதி போகி அன்று தமிழகம் உட்பட உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது.
தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட போதும், ரசிகர்கள் கூட்டம் காணப்பட்டது. செகண்ட் ஆப் கொஞ்சம் நீளமாக இருப்பதாக கருத்துக்கள் எழுந்த போதும் படம் வசூல், விமர்சன ரீதியாக பட்டையக் கிளப்பி வருகிறது.
தமிழக அளவில் வசூல் சாதனை படைத்து வந்த மாஸ்டர் திரைப்படம் வார இறுதியில் உலக அளவில் மெகா சாதனை ஒன்றை படைத்து ரசிகர்களையும், தியேட்டர் உரிமையாளர்களையும், விநியோகஸ்தர்களையும் வேற லெவலுக்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜனவரி 15 முதல் 17ம் தேதி வரை பொங்கல் விடுமுறை சமயத்தில் மாஸ்டர் திரைப்படம் உலக அளவில் 23 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது. பல ஹாலிவுட் படங்களையும் பின்னுக்குத் தள்ளியுள்ள மாஸ்டர் திரைப்படம், அவற்றை விட இரு மடங்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக அளவில் மாஸ்டர் படம் செய்த வசூல் சாதனையை அடுத்து ட்விட்டரில் #MasterTheGlobalTopper என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் தேசிய அளவிற்கு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.