
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். அவர் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது. மேலும் உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்து கடந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது. இதனால் பாக்ஸ் ஆபிஸ் கிங்காவும் விஜய் கருதப்படுகிறார்.
இதனிடையே தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ள அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார். கைவசம் இருக்கும் படங்களை முடித்து கொடுத்துவிட்டு, தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி கோட், தளபதி 69 ஆகிய படங்களில் மட்டுமே விஜய் நடிக்க உள்ளார். தளபதி 69 படத்தை யார் இயக்கப் போவது என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஜய்யின் கோட் படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பிரசாந்த், பிரபுதேவா, மீனாக்ஷி சவுத்ரி, லைலா, அஜ்மல், மோகன், ஜெயராம், பார்வதி நாயர், வைபவ், பிரேம்ஜி மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் கோட் படத்தின் 3-வது சிங்கிள் சமீபத்தில் வெளியானது. ஆனால் இந்த பாடலில் விஜய்யின் டீ – ஏஜிங் லுக் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. எனினும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையவில்லை.
இந்த சூழலில் கோட் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2004ம் ஆண்டு ரஷ்யாவில் மாஸ்கோ மெட்ரோ ரயிலில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த தீவிரவாத தாக்குதலை மையமாக கொண்டே கோட் படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பிடிப்பதே கோட் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. தளபதி விஜய் தனது குழுவுடன் இணைந்து இந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதே கதையாம்.
ஆனால் கடந்த கால ரகசியங்கள் வெளிச்சத்திற்கு வரும் போது, விஜய்யின் சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் படைக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த சிக்கல்கள் விஜய் மற்றும் அவரின் குழுவில் நிலைத்தன்மை குலைத்து, பரஸ்பர நம்பிக்கையையும் சிதைக்கிறதாம், இந்த சவால்களை கடந்து எப்படி தீவிரவாதிகளை விஜய் குழுவினர் பிடிக்கின்றனர் என்பதே கோட் படத்தின் கதையாம். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எனினும் இந்த தகவல் எந்தளவு உண்மை என்பது படம் வெளியான பின்னரே தெரியவரும்.
கோட் படத்தின் ட்ரெயலருக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக நெகட்டிவிட்டியை தவிர்க்க அடுத்த வாரத்தில் ட்ரெயிலரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே கோட் படத்தின் ட்ரெயிலர் அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்கக்ப்படுகிறது.