CM Joseph Vijay Net worth : தமிழக முதல்வர் விஜய் இன்று தனது பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
முதலமைச்சர் விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் அவரின் சொத்து விவரங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது வேட்புமனுவுடன் சொத்து விவரங்களையும் தாக்கல் செய்திருந்தார்.
அதில் இடம்பெற்றுள்ள தகவல்களின்படி, 2020-21 நிதியாண்டில் ரூ.8.04 கோடியாக இருந்த விஜய்யின் ஆண்டு வருமானம், 2024-25 நிதியாண்டில் ரூ.184 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், தனக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.624 கோடி என அவர் குறிப்பிட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கு வழங்கியுள்ள கடன் விவரங்களையும் விஜய் வெளிப்படுத்தியுள்ளார்.
24
விஜய் சொத்து மதிப்பு
அதன்படி, தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கு ரூ.3.02 கோடி, தாய் ஷோபாவுக்கு ரூ.87 லட்சம் மற்றும் மனைவி சங்கீதாவுக்கு ரூ.12.06 கோடி கடனாக வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல், மகன் ஜேசன் சஞ்சய்க்கு ரூ.8.78 லட்சமும், மகள் திவ்யா சாஷாவுக்கு ரூ.4.60 லட்சமும் கடனாக வழங்கியிருப்பதாக கூறியுள்ளார். மேலும், தவெக பொதுச் செயலாளரும் தனது நீண்டகால நண்பருமான என். ஆனந்திற்கு ரூ.3 கோடியும், தயாரிப்பாளர் வி. ரவிச்சந்திரனுக்கு ரூ.5 கோடியும் கடன் வழங்கியிருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகை மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் தொடர்பாகவும் விவரங்களும் அதில் இடம்பெற்றுள்ளன. விஜய்யிடம் ரூ.1.20 கோடி மதிப்பிலான 883 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.15 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி சங்கீதாவிடம் ரூ.4.07 கோடி மதிப்பிலான தங்க நகைகள், ரூ.5.10 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான வைர நகைகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
34
விஜய்யின் சொத்து விவரங்கள்
லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி. படிப்பை முதல் ஆண்டிலேயே நிறுத்தியதாக விஜய் தெரிவித்துள்ளார். தற்போது விஜய் வித்யாசிரம் பள்ளியின் தாளாளராகவும், ஜெயா நகர் ப்ராபர்ட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது தங்கை வித்யா பெயரில் செயல்படும் வித்யா சாரிடபிள் டிரஸ்ட் உள்ளிட்ட அறக்கட்டளைகளின் அறங்காவலராகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சொத்து விவரங்களில், கொடைக்கானல் வில்பட்டி பகுதியில் இரண்டு எஸ்டேட்டுகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வங்கி முதலீடுகளைப் பொறுத்தவரை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சாலிகிராமம் கிளையில் ரூ.213 கோடி, ஆக்சிஸ் வங்கியின் இந்திரா நகர் கிளையில் ரூ.57 கோடி மற்றும் எச்டிஎஃப்சி வங்கியின் பெசன்ட் நகர் கிளையில் ரூ.77 லட்சம் டெபாசிட் வைத்திருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார். மேலும், அவரது மனைவி சங்கீதாவின் எச்டிஎஃப்சி வங்கி கணக்கில் ரூ.10.43 கோடி டெபாசிட் இருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டிருந்தார்.
விஜய் சினிமாவில் ஹீரோவாக நடித்தபோது அவருக்கு பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டது. குறிப்பாக அவர் கடைசியாக நடித்த ஜனநாயகன் படத்திற்காக அவருக்கு ரூ.275 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. பின்னர் சினிமாவை விட்டு தற்போது அரசியலில் குதித்துள்ள விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். அவருக்கு தற்போது மாத சம்பளமாக 2 லட்சம் வழங்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.