தமிழ் சினிமாவில் கோலோச்சிய இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜா இன்று தனது 84வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் யதார்த்தமும், ஜன ரஞ்சகமும் ஒரே பாதையில் பயணிக்க முடியாது என்கிற இலக்கணத்தை தகர்த்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. தமிழ் சினிமாவை 16 வயதினிலே படத்துக்கு முன்பு, பின்பு என பிரிக்கும் அளவுக்கு, தனது முதல் படத்திலேயே மைல்கல்லை நாட்டினார் பாரதிராஜா. கதாபாத்திரங்களுக்கு பெயர் வைப்பதில் கூட எழுதப்படாத விதிகள் இருந்த காலகட்டத்தில் சப்பானி, பரட்டை, மயில் என்று இவர் உலவவிட்ட கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவுக்கு புதிய பரிணாமத்தை கொடுத்தன. செட்டுகளுக்குள் அடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவின் படப்பிடிப்பு களங்களை பட்டிதொட்டியெங்கும் நகர்த்தி, மண்வாசனை கமழச் செய்தவர் பாரதிராஜா.
25
பாரதிராஜாவின் திரைப்பயணம்
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் , கல்லுக்குள் ஈரம், மண்வாசனை என கிராமத்து வீதிகளிலும், வயல்வெளிகளிலும் புதைந்து கிடந்த அழகியலையும், உணர்வுகளையும் பதிவு செய்த பாரதிராஜாவின் படைப்புகளுக்கு தனது இசை மூலம் உயிர்கொடுத்தவர் இசைஞானி இளையராஜா. தலைமுறை தாண்டி வரும் போது சில சிறந்த படைப்புகள் கூட கிரிஞ்சாக தெரிவதுண்டு. ஆனால் சிவப்பு ரோஜாக்களில் கமல் மற்றும் ஸ்ரீதேவியின் மூலம் பாரதிராஜா காட்டிய வசீகரமும், இளமை துள்ளலும் தற்போதைய தலைமுறைக்கும் புதிதகாவே தோன்றும். கவித்துவத்தையும், அழகியலையும் த்ரில்லர் கதைகளிலும் வெளிப்படுத்த முடியும் என்று பாரதிராஜா நிரூபித்த படம் சிவப்பு ரோஜாக்கள்.
35
தமிழ் சினிமாவை புதிய களத்திற்கு கொண்டு சென்றவர் பாரதிராஜா
1977-ம் ஆண்டு பதினாறு வயதினிலே படத்தின் மூலம் பாரதிராஜாவின் வருகை நிகழ்ந்த பின்னர், தமிழ் சினிமா உருவாக்கம், எழுத்து, இசை, பாடல் என்று ஒவ்வொன்றாக புதிய களத்திற்குள் மாறியது. வில்லன் கதாபாத்திரங்களையும் வித்தியாசமான கோணத்தில் காட்டினார். பெண் உரிமைகளுக்கு குரல் கொடுத்த புதுமைப் பெண், ஜாதிய பேதங்களை சுட்டிக்காட்டிய வேதம் புதிது. காதல் மொட்டுக்களை மலரவிட்ட அலைகள் ஓய்வதில்லை, அரசியல் அறியாமையை சுட்டிக்காட்டிய என் உயிர் தோழன் என்று இயக்குனர் இமயம் பாரதிராஜா உருவாக்கிய படைப்புகள் காலம் கடந்து காவியமாக உலா வருகின்றன.
பாடல்களை படமாக்கும் விதத்திலும் புதிய இலக்கணத்தை படைத்தவர் பாரதிராஜா. எந்த காலத்திலும் தனது சிந்தனை புத்துணர்வுடன் இருக்கும் என்று பாரதிராஜா நிரூபித்த படம் பொம்மலாட்டம். நானே படேகர், அர்ஜுனை வைத்து பாரதிராஜா இயக்கிய இந்தப் படம் ஒரு சினிமா இயக்குனரின் வாழ்க்கையில் நிகழும் சம்பவத்தை யதார்த்தமான கதை ஓட்டத்தில் பதிவு செய்தது பாரதிராஜாவின் பிற்காலத்திய படங்களில் குறிப்பிடத்தக்கது இந்த பொம்மலாட்டம். பாக்கியராஜ், மணிவண்ணன், ராதிகா, ரேவதி, ரேகா என பாரதிராஜா எனும் பல்கலைக் கழகத்தில் இருந்து உருவான திரைப் பிரபலங்களின் பட்டியல், மிக நீளமானது.
55
பாரதிராஜா சொத்து மதிப்பு
தேனி அல்லி நகரத்தில் உதித்த இந்த சினிமா வைரத்தை பட்டைதீட்டியவர்கள், புட்டன்னா மற்றும் கிருஷ்ணன் நாயர் போன்ற இயக்குனர்கள் தான். அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியபோது யதார்த்த சினிமாவின் தாக்கம் பாரதிராஜாவுக்கு மேலோங்கியது. 6 முறை தேசிய விருது, நான்கு முறை பிலிம்பேர் விருது, பத்ம ஸ்ரீ விருது என்று இவர் வாங்கிய விருதுப் பட்டியலும் ஏராளம். தன் இனிய தமிழ் மக்களுக்காக பல மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்த பாரதிராஜா, இன்று தனது 84-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.80 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.