
கேரளாவில் கடந்த 1973ம் ஆண்டு பிறந்து, சென்னையில் கடந்த 2010ம் ஆண்டு வெறும் 37 வயதில் காலமான பாடகி தான் சுவர்ணலதா. இந்திய திரை உலகில் எத்தனையோ பாடகிகள் தங்களுடைய மிகச்சிறந்த குரலால் ரசிகர்களை ஈர்த்த நிலையில், முற்றிலும் மாறுபட்ட, ஜீவன் பொங்கி வழியும் அற்புதமான குரலை கொண்ட ஒரு பாடகி என்றால் அது சுவர்ணலதா மட்டுமே என்றால் அது சற்றும் மிகையல்ல. தனது 14 வது வயதில் திரைத்துறையில் பாட தொடங்கிய சுவர்ணலதா, 22 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது, பெங்காலி, ஒரியா, பஞ்சாபி மற்றும் படுகா என்று பத்து மொழிகளில் பத்தாயிரம் பாடல்களை பாடி இந்த உலகம் இருக்கும் வரை தன் குரலால் உயிரோடு இருக்கும் ஒரு மிகச் சிறந்த பாடகியாக மாறினார்.
ஸ்வர்ணலதாவின் தாய்க்கும் இசை மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக, தன் மகளிடமிருந்து தனித்துவமான அந்த திறமையை வெளிக்கொணர சென்னைக்கு, கேரளாவில் இருந்து குடிபெயர்ந்தனர். முதல் முதலில் 1987ம் ஆண்டு எம்.எஸ் விஸ்வநாதன் இசையில், வெளியான "நீதிக்கு தண்டனை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் பாடகியாக ஸ்வர்ணலதா பாடகியாக அறிமுகமானார்.
தொடர்ச்சியாக இளையராஜா, ராஜ்குமார், வித்யாசாகர், தேவா, கங்கை அமரன், சிற்பி மற்றும் சங்கர் கணேஷ் என்று பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி வந்த சுவர்ணலதா, கடந்த 1993ம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியான "ஜென்டில் மேன்" திரைப்படத்தில் ஒழித்த "உசிலம்பட்டி பெண்குட்டி" என்கின்ற பாடலை பாடினார்.
தொடர்ச்சியாக ரகுமான் இசையிலும் பாடல்களை அடுக்கிய ஸ்வர்ணலதாவிற்கு முதல் முறையாக கடந்த 1994ம் ஆண்டு ரகுமான் இசையில் வெளியான "கருத்தம்மா" என்ற படத்தில் ஒலித்த "போறாளே பொன்னுத்தாயி" என்ற பாடலுக்காக தான் தேசிய விருது கிடைத்தது. அவர் பெற்ற முதல் மற்றும் கடைசி தேசிய விருது அதுவே. அது மட்டுமல்ல அந்த 1994ம் ஆண்டு தான் ஸ்வர்ணலதாவிற்கு "கலைமாமணி" விருதும், தமிழக அரசு வழங்கும் சிறந்த பாடகிக்கான மாநில விருதும் "கருத்தம்மா" திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2001ம் ஆண்டு பிரபல இயக்குனர் முரளி கிருஷ்ணா இயக்கத்தில் உருவான "பார்வை ஒன்றே போதுமே" என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தார் பிரபல இசையமைப்பாளர் பரணி. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் தான் "துளித்துளியாய் கொட்டும் மழை துளியாய்" என்கின்ற பாடல். சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த பாடலுக்கு இன்றளவும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது. காரணம் இந்த பாடலை பிரபல பாடகர் ஹரிஹரனோடு இணைந்து பாடிய ஸ்வர்ணலதா தான்.
ஆனால் இந்த ஒரு பாடலை பதிவு செய்ய சுமார் ஐந்து நாட்கள் ஸ்வர்ணலதாவிற்காக பரணி காத்திருந்தாராம், மேலும் இந்த பாடல் குறித்து பேசிய அவர் "சுவர்ணலதா ஒரு வெள்ளை காகிதம் போல, அதில் நாம் என்ன எழுத நினைத்தாலும் அது 100 மடங்கு அழகாக வெளியே வரும். மிக மிக நேர்த்தியான, வித்தியாசமான குரலுக்கு சொந்தக்காரர். அவருடைய மறைவு என்னை மிகப்பெரிய அளவில் உலுக்கியது. "சார்லி சாப்ளின்", "பேசாத கண்ணும் பேசுமே", சுந்தரா ட்ராவல்ஸ்", "எஸ் மேடம்" போன்ற பல திரைப்படங்களில் என்னுடைய இசையில் அவர் பாடல்களை பாடி இருக்கிறார் என்றார் அவர்.
பல மொழிகளில் சிறந்த பாடகியாக விளங்கி வந்த சுவர்ணலதா, கடந்த 2006ம் ஆண்டு இசையமைப்பாளர் ஜான் பீட்டர் இசையில் வெளியான "ரகசிய சிநேகிதனே" என்கின்ற திரைப்படத்திற்காக தான் தனது இறுதி பாடலை பாடினார். பல ஆண்டு காலமாகவே நுரையீரல் சம்பந்தமான ஒருவகை நோயால் அவர் பாதிக்கப்பட்டு வந்தார். சென்னை அடையாறில் உள்ள மலர் என்ற மருத்துவமனையில் இதற்காக சில ஆண்டுகள் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 37வது வயதில் இதே செப்டம்பர் மாதம் 12ம் தேதி 2010ம் ஆண்டு அவர் காலமானார்.
ஒரு தேசிய விருது, மூன்று முறை தமிழக அரசு வழங்கும் மாநில விருது, ஐந்து முறை சினிமா எக்ஸ்பிரஸ் வருது, தமிழக அரசின் கலை மாமணி விருது என்று பல பெருமைகளுக்கு சொந்தக்காரியான சுவர்ணலதா குரலில் ஒழித்த "ராக்கம்மா கையத்தட்டு" என்கின்ற பாடல், கடந்த 2002ம் ஆண்டு பிபிசி பட்டியலிட்ட உலக அளவிலான டாப் 10 பாடல்களில் இடம் பிடித்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. இந்த பாடலை சுவர்ணலதாவோடு இணைந்து பாடியது எஸ்பி பாலசுப்பிரமணியம். இளையராஜாவோடு பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார் ஸ்வர்ணலதா. அதேபோல ரஹ்மானின் இசையில் 80க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார்.
விஜய் பட இயக்குனர் கெஞ்சி கேட்டும்... சூப்பர் ஹிட் படத்தில் ஹீரோயினாக நடிக்க மறுத்த பாடகி சைந்தவி!