
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சூர்யா வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதில் நந்தா, ஸ்ரீ, மௌனம் பேசியதே, பிதாமகன், பேரழகன், வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் வந்த படங்கள்.
சிங்கம் 2 படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வந்த படங்கள் பெரும்பாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த 11 ஆண்டுகளாகவே சூர்யா தோல்வி படங்களையே கொடுத்து வருகிறார். அந்த வகையில் 2021ல் சூர்யா நடிப்பில் வந்த எதற்கும் துணிந்தவன் படம் தோல்வி அடைந்த நிலையில் 3ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா மற்றும் சிறுத்தை சிவா காம்பினேஷனில் உருவான கங்குவா படம் நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வந்தது.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கங்குவா முதல் நாள் முதல் ஷோவிலேயே எதிர்மறை விமர்சனத்தை பெற்றது. அதோடு பலவிதமான குறைகளுடன் படம் வெளியாகியிருப்பதாக கங்குவா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக கங்குவாவின் வசூல் தடைபட்டது.
மேலும், சினிமா விமர்சகர்கள் தொடர்ந்து கங்குவா படம் குறித்து விவாதிக்கவும் செய்தனர். சினிமா பிரபலங்கள் பலரும் கங்குவா படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். எனினும், படத்தில் வசூல் தடைபட்டது. உலகம் முழுவதும் வெளியான கங்குவா இப்போது வரையிலும் ரூ.106 கோடி மட்டுமே வசூல் குவித்து சூர்யாவின் சினிமா கேரியரில் மோசமான படம் என்ற முத்திரையை பதித்துள்ளது.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் கங்குவா படத்தின் 2ஆவது பாகமும் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது தான். கண்டிப்பாக வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நடிகர் சூர்யா தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் உள்ள ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்றது.
இதில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அதோடு லப்பர் பந்து படத்தில் கெத்து கேரக்டரில் தினேஷிற்கு ஜோடியாக நடித்த சுவாஸிகா இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும், மலையாள நடிகர் இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவதா, நட்டி சுப்பிரமணியம், சுப்ரீத் ரெட்டி ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.
சூர்யாவின் 45ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அபயங்கார் இசையமைக்கிறார். முழுக்க முழுக்க ஆன்மீக கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தான் இந்தப் படத்திற்கு பிறகு சூர்யா மாருதி காரை மையப்படுத்திய கதையில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் திரைக்கு வந்த லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் தான் 80ஸ் மற்றும் 90ஸ் காலங்களில் பிரபலமாக இருந்த மாருதி காரை மையப்படுத்தி இந்த படம் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த காலகட்டங்களில் மாருதி கார் எப்படி பிரபலமாக வந்தது என்பதை இந்தப் படம் எடுத்துக்காட்டும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.