தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தோற்றை எதிர்த்து போராடி வரும் தமிழக அரசுக்கு உதவும் விதமாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி கொடுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் நிதியை வாரி வழங்கி வருகின்றனர்.
அரசியல் கட்சி தலைவர்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ரூ.10 லட்சமும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ரூ.10 லட்சமும், திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடியும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ரூ. 25 லட்சமும் வழங்கியுள்ளனர். தேமுதிக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
அதிமுக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி மட்டுமல்லாது தங்களுடைய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியத்தையும் வழங்க உள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர்.
திரையுலகைப் பொறுத்தவரை நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர் ரூ.1 கோடியும், அஜித் ரூ.25 லட்சமும், சிவகார்த்திகேயேன் ரூ.25 லட்சமும் வழங்கியுள்ளனர்.
நடிகர் ஜெயம்ரவி தன்னுடைய அப்பா மற்றும் சகோதரர் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
இயக்குநர்கள் வெற்றிமாறன், ஷங்கர் ஆகியோர் தலா ரூ.10 லட்சத்தை நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.
சற்று முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அதுமட்டுமின்றி அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளார். இதுவரை யாரும் கொடுக்காத அளவிற்கு நிதி வழங்கியுள்ள சன் குழுமத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.